சென்னை: அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு நீக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜக ஒன்றிய அரசு அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களை ஜிஎஸ்டி வரி எல்லைக்குள் சேர்த்து 5 சதவீதம் வரி விதித்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்படுவதால் அனைத்து அத்தியாவசிய உணவுப்பண்டங்களின் விலைகளும் வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்த்தப்பட்டு வாழ்க்கை செலவுச் சுமையை ஏற்றியுள்ளது.
இந்த நிலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இதன் மூலம் பாஜக ஒன்றிய அரசு உணவு உரிமையை பறித்து, உணவு பாதுகாப்புச் சட்டத்தை அர்த்தமிழக்க செய்கிறது.
மேலும் உணவு தானிய வணிகத்திலும், சில்லரை வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவோர்களை அத்தொழிலில் இருந்து வெளியேற்றி, கார்ப்பரேட் வணிகத்தை ஊக்கப்படுத்தும் ஒன்றிய அரசின் வஞ்சகச் செயலை கண்டித்து அரிசி ஆலை உரிமையாளர்களும், வியாபாரிகளும் நடத்தி வரும் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.
அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுத் தானியங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை கேட்டுக் கொள்கிறது” என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.