ஷிண்டே அரசு சட்டசபையில் வெற்றி பெற்றது, தகுதிநீக்க நோட்டீஸ் போன்றவை சட்டவிரோதம் என்று கூறி உத்தவ் தாக்கரே அணியினர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வரும் 20ஆம் தேதி அன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
சிவசேனா அதிருப்தி அணி தலைவரான ஏக்நாத் ஷிண்டே, பாஜகவுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தார். அவர் கடந்த மாதம் 30ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். இந்தநிலையில் கடந்த 3-ஆம் தேதி சட்டசபையில் புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. அடுத்த நாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதில் கொறடா உத்தரவை மீறியதாக ஏக்நாத் ஷிண்டே அணியினர் அளித்த புகாரின் பேரில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ராகுல் நர்வேகர் விளக்கம் கேட்டு தகுதிநீக்க நோட்டீசை அனுப்பினார். இந்தநிலையில் புதிய சபாநாயகர் தேர்வு, ஷிண்டே அரசு சட்டசபையில் வெற்றி பெற்றது, தகுதிநீக்க நோட்டீஸ் போன்றவை சட்டவிரோதம் என்று கூறி உத்தவ் தாக்கரே அணியினர் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை ஏற்கனவே உச்சநீதிமன்றம் விடுமுறைக்கால சிறப்பு அமர்வு விசாரித்தபோது விடுமுறை முடிந்த பிறகு ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூலை 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரிக்கும் அமர்வு விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை நீதிபதி கூறியிருந்தார். இந்நிலையில் வரும் 20ஆம் தேதி இன்னும் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையில் உத்தவ் தாக்கரே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் தங்களுக்கு எதிராக தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அதனை தடுக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர் இந்த மனுவை மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என இன்று தலைமை நீதிபதி அவர்கள் கோரிக்கை வைக்கப்பட்டது அதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி மனுக்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து வரும் 20ஆம் தேதி திட்டமிட்டபடி விசாரிக்கப்படும் என கூறினார்
இதையும் படிக்கலாம்: யஷ்வந்த் சின்கா Vs திரவுபதி முர்மு: இன்று தொடங்குகிறது குடியரசு தலைவருக்கான தேர்தல்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM