உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதே தமது நம்பிக்கை என்றும் அதற்கு அனைவரும் உடன்பாடு தெரிவித்தால்  பிரித்தானிய பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்வது தமது எதிர்பார்ப்பாகும் என்றும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நியாயமான அக்கறையுடன் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைகளுக்கான தீர்வை காண முடியும் என்று தெரிவித்த அவர் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகள் சில சமூகத்திற்குள் இருப்பதாகவும் கூறினார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று விசேட அறிக்கையொன்றை விடுத்து, உரையாற்றுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உரிய விசாரணைகள் இன்மையால், இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படாமல் உள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணை அறிக்கைகளும் மீண்டுமொருமுறை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு இடம்பெற்றது. இதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது,  அதன் பின்னர் இரண்டு மாதங்களில்மின்துண்டிப்பு 3 மணித்தியாலமாக குறைக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டு நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்பட்டுள்ளது..

ஜூலை மாதம் எரிபொருள் விநியோகத்திற்கு கடினமான காலமாக இருக்கும் என்று ஏற்கனவே கூறிப்பிட்டேன். எவ்வாறாயினும், டீசல் இருப்புக்கள் பாதுகாக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் ஜூலை 21 முதல் பெட்ரோல் விநியோகிக்கப்படவுள்ளன.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டின் குடிமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. 2 ஏக்கருக்கும் குறைவான வயல்களை பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ளது. நாட்டில் தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் முடிவடையும் தறுவாயில் இருப்பதாகவும், வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருவதாகவும் விளக்கமளித்தார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே காரணம் பொதுமக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் 19ஆவது திருத்தச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளி தனிநபரின் கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க கூடாது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்துக் கட்சி ஆட்சியை அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.