மான்செஸ்டர்,
கடந்த ஆண்டு கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனை தொடர்ந்து நடந்த டி20 தொடரில் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வென்றது. இதையடுத்து, இந்தியா – இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில், 1-1 என இரு அணிகளும் சம நிலையில் இருந்த நிலையில் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
மான்செஸ்டர் நகரின் ஓல்டுடிராப்ட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 42.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட் 113 பந்துகளில் 125 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து, இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார். மேலும், தொடர் நாயகன் விருதை ஹர்திக் பண்டியா கைப்பற்றினார்.