கரூர்: கரூரில் ஆடிபிறப்பில் நடைபெறும் சுவாமி படையலுக்கான தேங்காய் சுடுவதற்காக வாதா மரக்குச்சிகள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆடி 1ம்தேதி முதல் 18ம் தேதிவரை மகாபாரத யுத்தம் நடைபெற்றதாகவும், யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1 மற்றும் யுத்தம் முடிவுற்ற 18 ஆகிய நாட்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடி பிறப்பான ஆடி 1ம் தேதியன்று கரூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தேங்காய் சுட்டு வழிப்பாடு செய்துவருகின்றனர்.
இதற்காக அவர்கள் கையாளும் முறை வேறெங்கும் காணமுடியாதது. தேங்காயில் துளையிட்டு அதன் தண்ணீரை எடுத்துவிட்டு, பச்சரிசி, வெல்லம், பொட்டுக்கடலை, எள், அவல் ஆகியவற்றை தேங்காயினுள் போட்டு, தண்ணீர் ஊற்றி மூடி, மஞ்சள் பூசி, குங்குமம் வைப்பார்கள்.
அதனுடன் சுத்தப்படுத்தப்பட்ட வாதா மரக்குச்சியில் மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து அக்குச்சியில் தேங்காயை குத்தி, அமராவதி ஆற்றில் படிக்கட்டுத்துறை, பசுபதிபாளையம், ஆண்டாங்கோவில் உள்ளிட்ட இடங்கள் மற்றும் ஊர்மந்தை, வீடுகளில் தீயில் வாட்டுவார்கள். அதன்பின்னர் தேங்காய் நன்கு வெந்ததும், அதனை சுவாமிக்கு படையலிட்டு புதுமண தம்பதிகள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள், பெண்கள் வழிப்பாடு செய்து ஒன்றுகூடி சாப்பிடுவார்கள்.
தேங்காயை சுடுவதற்காக தேங்காயில் துளையிட்டு வாதா மரக்குச்சியில் குத்தி தீயில் வாட்டுவது பாரம்பரிய சடங்காக நடைபெற்று வருகிறது. இதற்காக கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் இன்று (ஜூலை 17) 10க்கும் மேற்பட்டோர் வாதா மரக்குச்சிகளை வெட்டி வந்து, அவற்றை சீவி, சுத்தப்படுத்தி வாதா மரக்குச்சிகளை விற்பனை செய்தனர்.
வாதா மரக்குச்சி ஒன்று ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டது. தேங்காய் சுடுவதற்காக பலரும் வாதா மரக்குச்சிகளை வாங்கிச் சென்றனர்.