பெங்களூரு : ”நாட்டின் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக, கர்நாடகாவில் 1 கோடி தேசிய கொடிகள் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
ஆலோசனை
பெங்களூரு தனியார் ஹோட்டலில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர், கூட்டுறவு துறை அமைச்சர், கலாச்சார துறை அமைச்சர்களுடன், ‘வீடு தோறும் மூவர்ணம்’ என்ற தலைப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மை, வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது:இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அரசு, அரசு சாரா பள்ளி, கல்லுாரிகள் மற்றும் மாநில தலைமை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுஉள்ளது. மாவட்ட கலெக்டர்கள், கன்னடம் மற்றும் கலாச்சாரம், காவல்துறை உள்ளிட்டோருடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கிராமப்புறங்களில் 60 சதவீதமும்; நகர்ப்புறங்களில் உள்ள வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகளில் 40 சதவீதம் என மொத்தம் 1 கோடி தேசிய கொடிகளை ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கொடிகளை தயாரித்து நாடு முழுவதும் வினியோகம் செய்யும் தார்வாட் அருகே உள்ள தேசிய கொடி தயாரிப்பு நிறுவனம் மூலம், 50 லட்சம் கொடிகளை தயாரிக்க உள்ளோம்.ஏற்கனவே 5 லட்சம் மூவர்ண கொடிகள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 45 லட்சம் கொடிகள் விரைவில் வழங்கப்படும்.
விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன், தேசிய கொடிகள் வந்து சேரும். இத்துடன், யோகா சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தேசியவாதம் மற்றும் தேசபக்தியை ஊக்குவிப்பர்.
‘வீடு தோறும் மூவர்ணம்’
தேசிய கொடியே எங்களின் உணர்வுப்பூர்வமான மையமாக இருப்பதால், ‘வீடு தோறும் மூவர்ணம்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதன் மூலம், நாட்டில் ஒற்றுமையை மேம்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது மட்டுமின்றி, கர்நாடகாவில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அங்கன்வாடிகள், என்.சி.சி., – என்.எஸ்.எஸ்., அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட தன்னார்வ தொண்டர்கள், இத்திட்டத்தை வெற்றியடைய செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது:
இத்திட்டத்தை பற்றி அனைத்து மட்டங்களிலும் தேவையான மற்றும் விரிவான விளம்பரங்களை வழங்குவதை தவிர, ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நாடு முழுதும் 20 கோடி தேசிய கொடிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த திட்டம் வெற்றி பெறுவதில் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி, மக்களின் பங்களிப்பும் முக்கியம் என்பதால், 100 கோடி மக்களையும்
இத்திட்டத்தில் தீவிரமாக பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். பல துறைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், இந்நிகழ்ச்சியை நடத்துவது கவுரவமான விஷயம்.சமூக வலைதளங்களிலும், அனைத்து அரசு விளம்பரங்களிலும் இத்திட்டத்தை அறிவிப்பது மட்டுமின்றி, தபால் நிலையங்களில் தேசிய கொடிகள் கிடைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்