இந்திய நிகழ்வுகள்
கோவிலில் இறைச்சி வீச்சு: கடைகளுக்கு தீ வைப்பு
லக்னோ-உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலுக்குள் மர்ம நபர்கள் இறைச்சி துண்டுகளை வீசிச் சென்றதால் வன்முறை ஏற்பட்டது. உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கன்னோஜ் மாவட்டத்தில் ரசூலாபாத் கிராமத்தில் உள்ள கோவிலுக்குள், மர்ம நபர்கள் சிலர் இறைச்சி துண்டுகளை வீசிச் சென்றனர். அதிகாலையில் கோவிலுக்கு வந்த அர்ச்சகர், இறைச்சி துண்டுகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளூர் மக்களும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் இருந்த இறைச்சி துண்டுகளை அகற்றி, வளாகத்தை சுத்தம் செய்தனர். இந்த தகவல், ஊர் முழுதும் பரவியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின் வன்முறையாக மாறியது. அந்தப் பகுதியில் இருந்த மூன்று இறைச்சி கடைகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
மூணாறில் காட்டுமாட்டை கொன்று இறைச்சி பங்கிட்ட ஐந்துபேர் கைது
மூணாறு -கேரளா மூணாறு அருகே தலையார் எஸ்டேட் கடுகுமுடி டிவிஷனில் காட்டுமாட்டைக் கொன்று இறைச்சியை பங்கிட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ரமேஷ் 40 காளிதுரை 41 கருப்பசாமி 50 ராமர் 46 அமுல்ராஜ் 35 ஆகிய ஐந்துபேரை வனத்துறையினர் கைது செய்தனர்.அங்கு வளர்ப்பு நாய்களிடம் சிக்கிய காட்டுமாடு உயிர் தப்ப ஓடியபோது அடர்ந்த புதருடன் உள்ள குழியில் விழுந்து சிக்கிக் கொண்டது. அங்கு தேயிலை தோட்டத்தில் பணியின் இடையே கவனித்த ஐந்து பேரும் கத்தியால் காட்டுமாட்டை வெட்டிக்கொன்று இறைச்சியை பங்கிட்டு டூவீலர்களில் வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்றனர். மூணாறு வனத்துறை அதிகாரி அருண்மகாராஜ் தலைமையிலான வனக்காவலர்கள் ஐந்து பேரையும் கைது செய்து 80 கிலோ இறைச்சி டூவீலர்களை பறிமுதல் செய்தனர்
.
தமிழக நிகழ்வுகள்
மாணவி இறந்த வழக்கு: சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்
சென்னை–”மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது,” என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு கூறினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:கலவரக்காரர்கள் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தில், டி.ஐ.ஜி., பாண்டியன் உட்பட 52 போலீசார் காயம் அடைந்துள்ளனர். மாணவியின் இறப்பால் விடுதியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் இருந்தது.
இது தொடர்பாக, பள்ளி தாளாளர் ரவிகுமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவி மரணம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார், எங்கிருந்து வந்தனர், பள்ளியை தாக்குவதற்கான காரணம் என்ன என்பது குறித்து, தனியாக புலன் விசாரணை நடந்து வருகிறது.
கலவரம் தொடர்பாக ‘வாட்ஸ் ஆப் குழு’ உருவாக்கி ஒருங்கிணைத்தவர்கள், கலவரத்தை முன் நின்று நடத்தியவர்கள், ‘வீடியோ’ ஆதாரம் வாயிலாக அடையாளம் காணும் பணி நடக்கிறது. கலவரத்தின் பின்னணயில் இருப்போர் குறித்து விசாரித்து வருகிறோம். அவர்கள் தப்ப முடியாது. சட்ட ரீதியாக கைது செய்யப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.அப்போது, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, கலெக்டர் ஸ்ரீதர், கூடுதல் டி.ஜி.பி., தாமரைக்கண்ணன் ஆகியோர் இருந்தனர்.
கல்லூரி மாணவி கையை உடைத்த இருவருக்கு காப்பு
மறைமலை : கல்லுாரி மாணவியின் கையை உடைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
மறைமலை நகர் அடுத்த, பேரமனுார் எம்.டி.சி., நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவி வினிஷா, 20.இவர், பத்தாம் வகுப்பு படித்த போது அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார், 23, என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது.நாளடைவில் பிரவீன்குமார் நடவடிக்கைகள் சரி இல்லை என கூறி பிரிந்துள்ளார்.
இதன் காரணமாக, மூன்று ஆண்டுகளாக சிறு சிறு பிரச்னைகள் இருவருக்கும் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம், மாலை 5:30 மணி அளவில் வீட்டின் பின்புறம் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த பிரவீன்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் மணி, 24, ஆகிய இருவரும் வினிஷாவை தகாத வார்த்தைகள் கூறி திட்டி அடித்துள்ளனர்.
இதில் நிலை தடுமாறி விழுந்த வினிஷாவின் வலது கை மீது மணி ஏறி நின்று உள்ளார். இதில், கை முறிந்து வினிஷா அலறியதை கண்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர்.தகவலறிந்து வேலைக்கு சென்றிருந்த அவரது அம்மா, அவரை பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவமனை ஊழியர்கள் மறைமலை நகர் போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் பிரவீன்குமார் மற்றும் மணிஆகியோரை நேற்று காலை கைது செய்தனர்.
தந்தை கொலை: போதையில் மகன் ‘வெறி’
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே நிலத்தை பிரித்து கொடுக்காததால், போதையில் தந்தையை கல்லால் அடித்துக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, களமருதுார் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை, 55; கூலித் தொழிலாளி. இவரது மகன் அரவிந்த் 23; மகள் செந்தமிழ்செல்வி, 20.கட்டட மேஸ்திரியான அரவிந்த், மது போதைக்கு அடிமையாகியிருந்தார். அதனால், அண்ணாமலை, மகன் அரவிந்துக்கு நிலத்தை பிரித்து கொடுக்காமல் மகள் செந்தமிழ்செல்விக்கு, 3 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளார்.இதனால் ஆத்திரம்அடைந்த அரவிந்த், நேற்று மாலை, 4:00 மணியளவில் மது போதையில் தகராறு செய்து, கல்லால் அண்ணாமலையை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அண்ணாமலை சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருநாவலுார் போலீசார், அண்ணாமலையின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அரவிந்தை கைது செய்தனர்.
வாலிபரை கொன்ற சிறுவன் கைது
தஞ்சாவூர்-வட மாநில ஐஸ் வியாபாரியிடம் தகராறு செய்து, வாலிபரை வெட்டி கொலை செய்த 17 வயது சிறுவனை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே, மணக்கரம்பை பகுதியில், நேற்று முன்தினம் மாலை, உத்தர பிரதேச மாநிலம், மேன்புரி மாவட்டத்தைச் சேர்ந்த வசீம் என்பவர் ‘டூ – வீலரில்’ ஐஸ் வியாபாரம் செய்தார்.அப்போது, அம்மன் பேட்டையைச் சேர்ந்த சாமிநாதன், 22, மற்றும் 18, 17 வயது சிறுவர்கள் இருவர் சேர்ந்து, வசீமின் டூ – வீலரை பறித்து அடித்து விரட்டி உள்ளனர்.அந்த டூ வீலரை மீட்க, நேற்று முன்தினம் இரவு, ஐஸ் கம்பெனியில் வேலை பார்க்கும் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள ஒன்பத்து வேலியை சேர்ந்த ஹரிபிரசாத், 22, கார்த்திகேயன், 35, மற்றும் வட மாநில தொழிலாளர் நசீம் ஆகியோர் மணக்கரம்பைக்கு வந்துள்ளனர்.சாமிநாதன் மற்றும் இரண்டு சிறுவர்களிடம் சென்று, வசீமின் டூ – வீலரை திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். தர முடியாது எனக்கூறி தகராறு செய்த அவர்கள், அரிவாளால் வெட்டியுள்ளனர்.வசீமும், ஹரிபிரசாத்தும் தப்பி ஓடி விட்டனர். அரிவாள் வெட்டு பட்டதில் படுகாயமடைந்த கார்த்திகேயன் அதே இடத்தில் இறந்தார். ஹரிபிரசாத் கொடுத்த புகார்படி, நடுக்காவேரி போலீசார் நேற்று, 17 வயது சிறுவனை கைது செய்தனர். தப்பியோடிய சாமிநாதன் மற்றும், 18 வயது சிறுவனை தேடுகின்றனர்.
பூட்டிய வீட்டில் தம்பதி பிணம்; கொடுக்கல் வாங்கலில் கொலை
ராஜபாளையம்– ராஜபாளையம் அருகே, பூட்டிய வீட்டில் வயதான தம்பதி பிணமாக மீட்கப்பட்டனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், தெற்கு வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால், 75. இவரது மனைவி குருபாக்கியம், 68. ராஜகோபால், தனியார் மில்லில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர்கள், மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியே வீட்டுக்குள் பார்த்தபோது, தனித்தனி அறைகளில் இருவரும் இறந்து கிடந்தனர்.தெற்கு போலீசார் ஆய்வு செய்தபோது, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் உடல் அழுக துவங்கியிருந்தது. வீட்டில் கட்டிலை சுற்றி, மிளகாய் பொடி துாவப்பட்டிருந்தது.மதுரை டி.ஐ.ஜி., பொன்னி, விருதுநகர் எஸ்.பி., மனோகரன், டி.எஸ்.பி., சபரிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.
மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இறந்து போன ராஜகோபாலின் இரண்டு மகன்கள் வெளியூரில் உள்ள நிலையில், இவர் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார்.சம்பவம் குறித்து வழக்குப் பதிந்த போலீசார், கொடுக்கல், வாங்கல் தகராறில் கொலை நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து, ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
‛பரோலில்’ பதுங்கியவர் கைது
ஓசூர்-டில்லி திகார் சிறையிலிருந்து ‘பரோலில்’ வந்து தலைமறைவானவரை, டில்லி போலீசார் ஓசூரில் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத், ரங்காரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் அனமல குண்டம் சோமசேகர், 40. கஞ்சா வழக்கில் கைதான இவர், டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்தாண்டு மார்ச் 28ல் பரோலில் வந்தவர் தலைமறைவானார். டில்லி போலீசார் தேடி வந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், மூக்கண்டப்பள்ளி, வேணுகோபால் சுவாமி கோவில் தெருவில் தங்கியிருந்த அவர், அதே பகுதியைச் சேர்ந்த மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வரும் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.இது குறித்து டில்லி போலீசாருக்கு தெரியவந்தது. ஓசூருக்கு நேற்று முன்தினம் வந்த டில்லி போலீசார், ‘சிப்காட்’ போலீசார் உதவியுடன், அனமலகுண்டம் சோமசேகரை கைது செய்தனர். ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, டில்லி அழைத்துச் சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்