கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் நேற்று நடந்த கலவரத்தில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 108 பேரை கள்ளக்குறிச்சி மாவட்ட மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில், போலீஸார் ஆஜர்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அந்த போராட்டம் வன்முறையாக வெடித்து, தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடையதாக இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 108 பேர் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதே போல் கலவரத்தில் ஈடுபட்டதாக கைதான 28 சிறார்களை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கள்ளக்குறிச்சி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று நடந்த கலவரத்தின் வீடியோ காட்சிப்பதிவுகளை ஆதாரமாக கொண்டு போலீஸார் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், கைது எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில், தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் கிருத்திகா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவியின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளாகம், தனியார் பள்ளி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.