எஸ். வி. ரங்க ராவ், ஆந்திராவில் பிறந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு தமிழில் ‘அக்ஷராப்பியாசம்’ நடைபெற்றது என்பது அநேகருக்குத் தெரியாது. ஆம் சிறு வயதிலேயே அவர் தமது சகோதர சகோதரிகளுடன் சென்னைக்கு வந்து விட்டார். ஆறாவது பாரம் வரை திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூலில் தான் படித்தார். பிறகுதான் விசாகப்பட்டினத்தில் ‘இண்டர்மீடியட்’டை முடித்துக் கொண்டு, காகினாடாவுக்குப் போய் தாவர சாஸ்திரத்தில் பி. எஸ்.ஸி. பட்டம் பெற்றார்.
“‘தமிழில் பேசவும் படிக்கவும் எப்படிப் பழகிக் கொண்டீர்கள்?’ என்று என்னைப் பார்த்து யாராவது கேட்டால் எனக்குச் சிரிப்புத் தான் வரும். நான் தமிழ் நாட்டைச் சேர்ந்தவன்! நான் தமிழில் பேசுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஹை ஸ்கூல் படிப்பை முடித்து விட்டு நான் ஆந்திராவுக்குச் சென்றப்போது அங்கு எல்லோரும் நான் பேசிய தெலுங்கைக் கண்டு சிரித்தார்கள். நான் பேசியது மெட்ராஸ் தெலுங்கு!
கொஞ்சம் சிரமப்பட்டு சுத்தத் தெலுங்கு பேசக் கற்றுக்கொண்ட பிறகுதான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். “பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே நான் சிறு நாடகங்களில் நடித்திருக்கிறேன். இந்து ஹைஸ்கூலில் அப்போது ஆசிரியராக இருந்த தேசிகாச்சாரி என்பவர்தான் என்னை இந்தத் துறையில் பழக்கி வைத்தார். அவர்தான் என்னுடைய நாடக குரு என்று சொல்ல வேண்டும். அப்போதே ஷேக்ஸ்பியர் நாடகங்களிலெல்லாம் முக்கிய பாகம் ஏற்று நடித்திருக்கிறேன். ‘வெனிஸ் நகர வர்த்தகன்’ என்ற நாடகத்தில் ‘ஷைலக்’ வேஷம்தான் என் ‘மாஸ்டர் பீஸ்’.”
கல்லூரியில் படிக்கும் போதும், அதற்குப் பிறகும் ரங்க ராவ் நாடகங்களில் நடிப்பதை விடவில்லை. ‘யெங்மென் ஹாப்பி கிளப்’ என்ற சங்கத்தார் நடத்திய நாடகங்களிலெல்லாம் அவர் நடித்திருக்கிறார். இப்போது பிரபலமாயிருக்கும் பல ஆந்திர நடிக, நடிகைகள் அங்கு தயாரானவர்கள்தான். இரண்டாவது உலக யுத்தத்தின்போது ரங்கராவ் தீயணைக்கும் படையில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, 1945-ல் அவருடைய மாமன் திரு ராமானந்தம் தயாரித்த ‘வருதினி’ என்ற புராணப் படத்தில் நடித்தார். அதுவே அவருடைய முதல் படம். ஆனால் அந்தப் படம் ஒரு பெரும் தோல்வி. மனமுடைந்த ரங்க ராவ் ஜெம்ஷட்பூர் லோகோ ஒர்க்ஸில் பணி புரியப் போய் விட்டார்.
அவர் மீண்டும் சென்னைக்கு வந்தது 1947-ல். அப்போது அவருக்கு வயது முப்பது. நான்கு ஐந்து நண்பர்களுடன் ஓர் ஓட்டலில் தங்கியிருந்த அவர், வேலை தேடிப் பட்டணம் பூராவும் சைகிளில் அலைந்து கொண்டிருந்தார். ” சினிமாவில் ஒரு சான்ஸ் கிடைக்குமா?’ என்று தவியாய்த் தவித்தார். அப்போது அவருக்கு அபயம் அளித்தவர் டைரக்டர் பிரசாத்.
“அவர் என்னை திரு சக்ரபாணியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்துவிட்டு, என் நாடகங்களைத் தாம் பார்த்திருப்பதாகவும், என் நடிப்பில் அபார நம்பிக்கை இருப்பதாகவும் அவரிடம் துணிந்து ஒரு பொய்யையும் சொன்னார். ஆம், பொய்தான். பிரசாத் என் நாடகங்களைப் பார்த்ததே இல்லை. என் நடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார், அவ்வளவுதான்! ‘என்னடா, இப்படிப் பச்சைப் பொய்யைச் சொல்லுகிறாரே என்று எனக்குத் தர்ம சங்கடமாகிவிட்டது. ஏதோ சொல்ல நினைத்தவன் அடக்கிக் கொண்டுவிட்டேன். அன்று பிரசாத் அந்தப் பொய்யைச் சொல்லியிருக்காவிட்டால் நான் இன்று இந்த நிலையில் இருக்கமாட்டேன்….
பிரசாத் சிபாரிசு செய்தும் கூட சக்ரபாணிக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. “ஆசாமியைப் பார்த்தால் சூட்டு அணிந்து கொண்டு ஸ்டைலாக இருக்கிறான். இவன் ‘ரெளடி’ வேஷத்திற்குப் பொருந்துவானா’ என்ற சந்தேகக் குறி அவர் முகத்தில் தோன்றிற்று. ‘நாளைக்கு வாருங்கள். உங்களுக்கும் குடும்ப ராவுக்கும் மேக்கப் போட்டுப் பார்க்கிறேன். வேஷம் யாருக்கு நன்றாகப் பொருந்துகிறதோ அவரைத் தேர்ந்து எடுத்துக் கொள்கிறேன்’ என்றார். நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு ‘செளகார்’ படத்தில் ‘ரெளடி’ பாத்திரத்தில் நடிக்க என்னையே ஒப்பந்தம் செய்தார்கள். படப்பிடிப்பன்று நான் ‘மேக்கப்’ போட்டுக் கொண்டு வந்தேன். என் மீது நம்பிக்கையில்லாத சக்ரபாணி வேறொரு ஆசாமியைத் தயாராக வைத்துக் கொண்டிருந்தார்! அன்று நான் என் திறமையையெல்லாம் காட்டி நடித்தேன். பிறகு ‘ரஷ்’ போட்டுப் பார்த்துவிட்டுப் பிரசாதும், சக்ரபாணியும் என்னை மிகவும் பாராட்டினார்கள். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.”
இதுவரை சுமார் 150 படங்களில் நடித்துள்ள ரங்கராவ் நடிப்புத்துறையில் தமது சாதனை மிகவும் அற்பமானது என்று கருதுகிறார்! “நான் சாதித்துள்ளது’ ஒரு துளிதான்; எனக்கு முன்னால் ஒரு சமுத்திரமே இருக்கிறது. ‘நாம் கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு’ என்று ஒவ்வொரு கலைஞனும் நினைக்க வேண்டும். ‘நாம் வெற்றி அடைந்து விட்டோம். எல்லாவற்றையும் சாதித்து விட்டோம். நமக்கு நிகர் யார்?’ என்று மார்தட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டால் ஒரு நடிகனும் முன்னேற முடியாது. ஒரு பாத்திரத்தை ஏற்றுக் கொண்டால், நான் அதைப் பற்றியேதான் சதா சிந்தித்துக் கொண்டிருப்பேன். ‘இப்படிச் செய்யலாமா? அப்படிச் செய்யலாமா?’ என்று எனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டுதான் படப்பிடிப்புக்குப் போவேன். வசனங்களை எத்தனை குறைக்க முடியுமோ, அத்தனை குறைத்துக் கொள்வேன். ‘ஒவ்வொரு பேச்சும் ரசிகர்களின் அறிவுக்கு விருந்தாக இருக்க வேண்டும். ‘ஒவ்வொரு முகபாவமும் அவர்கள் இதயத்தைத் தொட வேண்டும்’ இதுதான் என் லட்சியம்!”
தயாரிப்பாளர்களும் கதாசிரியர்களும் நடிகர்களை மனத்தில் வைத்துக் கொண்டுதான் கதையை எழுதுகிறார்கள் என்கிறார் அவர். “என்னிடம் வருபவர்களிடம் நான் ‘எனக்கு என்ன ரோல்?’ என்று கேட்டால் ”சாவித்திரிக்கு அப்பா என்றே, அல்லது சரோஜா தேவிக்கு அப்பா’ என்றோதான் சொல்லுகிறார்கள்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார்.
ரங்கராவ் இப்போது ‘நானும் ஒரு பெண்’ இந்திப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன் ‘பாதாள பைரவி’, ‘சண்டி ராணி’ ஆகிய இரண்டு இந்திப் படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு இரவல் குரல் கிடையாது. “இந்திப் படங்களில் நான்தான் பேசுகிறேன். நான் நன்றாக இந்தி பேசுவேன்” என்றார் அவர்.