சின்னசேலம்: பள்ளி மாணவி உயிரிழப்பு; கலவரமாக மாறிய போராட்டம்; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட விசாரணை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பகுதியில் இங்கி வருகிறது தனியார் பள்ளியான சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியின் விடுதியில் தங்கி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அன்று காலை விடுதியின் இரண்டாவது தளத்தில் இருந்து அம்மாணவி குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக பள்ளி தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் கூறப்பட்டது. படிக்கச் சொல்லி ஆசிரியர்கள் அதிக அழுத்தம் கொடுத்ததினாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறியிருந்த எஸ்.பி செல்வக்குமார், அம்மாணவி எழுதியதாக தற்கொலை கடிதம் ஒன்றை உறவினர்கள் முன்னிலையில் வாசித்துக் காட்டியிருந்தார். அந்த கடிதத்தின் அடிப்படையில் கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா ஆகிய இருவரையும் கைது செய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவி

இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்டும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் கூறி சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், தங்கள் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை எனவும் மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், மாணவியின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து அவரின் தாய் செல்வி வீடியோ பதிவு ஒன்றில் கனத்த குரலில் உருக்கமாக பேசியிருந்தது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதோடு அதீத தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவியின் குடும்பத்தினர், சி.பி.சி.ஐ.டி விசாரணை கேட்டும், மாணவியின் உடலை மறு உடற்கூற்றாய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தியும் உடலை வாங்காமல் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில், நேற்று (17.07.2022) காலை பள்ளி அமைந்துள்ள கணியாமூர் பகுதியில் மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு கோஷமிட்டபடி மாணவ அமைப்பினர் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம், ஒரு கட்டத்தில் கலவரமாக மாறிய சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. பள்ளி வளாகத்தில் இருந்த சுமார் 15 பேருந்துகள், போலீஸாரின் 40 இரு சக்கர வாகனங்கள், ஒரு பேருந்து, டிராக்டர், கார், ஜே.சி.பி இயந்திரம் மற்றும் பள்ளியையும் தீக்கிரையாக்கப்பட்டது. மேலும், பள்ளிக்கு வெளியே இருந்த சில வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.

கலவரம் – கணியாமூர்

இதனால் அந்த பகுதியே கலவர பூமியாக மாறியது. இந்த கலவரத்தின் போது நடத்தப்பட்ட கல்வீச்சில்… டிஐஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி எஸ்.பி, சேலம் எஸ்.பி உள்ளிட்ட 52 போலீஸார் காயமடைந்தனர். பள்ளி மற்றும் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் எழுந்த கரும்புகை அப்பகுதியை மேலும் பரபரப்பாக்கியது. கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதால், விழுப்புரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்தும் சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு, கலவரத்தை கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தை அடக்கும் முயற்சிகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.

ஒருவழியாக, மதியம் 1.30 மணிக்குமேல் கலவர பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் காவல்துறை கொண்டுவந்தது. அதற்குள் பள்ளி வளாகத்தின் பெரும்பாலான பகுதி சூறையாடப்பட்டிருந்தது. உடனடியாக தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்திருந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு வருவாய் கோட்டாட்சியரால் பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து, கலவரத்தில் தொடர்புடையதாக கருதும் நபர்கள் சிலரை போலீஸார் மடக்கி பிடித்து வந்தனர். மேலும், இந்த கலவரத்தின் காரணமாக பொது போக்குவரத்தும் மாற்றுப்பாதையில் மாற்றிவிடப்பட்டது. இந்நிலையில், மாலை 6 மணிக்கு மேல் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்ட தமிழக அரசின் உள்துறை செயலர் பனிந்தர்ரெட்டி மற்றும் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆகியோர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு, “மாணவியின் இறப்பு சம்பந்தமாக உடனடியாக வழக்கு பதிந்து முறையாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டதோடு, சி.சி.டி.வி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்றைய தினம் (17.07.2022) கூட ஒரு டிஐஜி தலைமையில், இரு எஸ்.பி-களின் மேற்பார்வையில் 350 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அதையும் மீறி இந்த கலவரத்தை செய்துள்ளார்கள். தற்போது கலவரம் அடங்கியுள்ளது. டிஐஜி, எஸ்.பி உட்பட இந்த கலவரத்தில் 52 காவலர்கள் காயமடைந்துள்ளனர். அடிப்பட்டிருந்தாலும், பெரும் அசம்பாவிதம் நடைபெறாதபடி கண்ணும் கருத்துமாக காவல்துறையினர் இருந்துள்ளனர். எவ்வித எதிர்வினையும் இல்லாமல், உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் கவனமாக செயல்பட்டுள்ளனர். காவல்துறையினர், அவர்களுடைய கடமையை சிறப்பாக செய்துள்ளனர்.

மாணவியின் மரணத்திற்கு காரணமான மற்றும் போதிய பாதுகாப்பு வசதிகள் அந்த விடுதியில் இல்லாததாலும், அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குழு நடத்தி, கூட்டத்தை ஒன்று சேர்த்தனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பள்ளிக்கூடத்தை தாக்கியது என்பது தனி வழக்கு. அந்த தனி வழக்கில், எந்தெந்த பகுதியில் இருந்து யார் யார் வந்தார்கள், அவர்கள் ஏன் பள்ளிக்கூடத்தை தாக்க வேண்டும்? உள்ளிட்ட சந்தேக கோணங்களில் புலன் விசாரணை நடத்தப்படும். இந்த கலவரத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.” என்றனர்.

காயமடைந்த போலீஸாரை சந்தித்த ஏடிஜிபி தாமரைக்கண்ணன், டிஜிபி சைலேந்திரபாபு.

அதன் தொடர்ச்சியாக, காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸாரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இந்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை, இன்றைய தினம் சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.