‘ஜெய்பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில், எந்த கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
த.செ. ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருந்தப் படம் ‘ஜெய்பீம்’. ஓடிடியில் வெளியான இந்தப் படத்தில், இந்து வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அச்சமூக மக்களை இழிவுப்படுத்தியும், பிறமக்களின் மனதில் வெறுப்பை உருவாக்கும் வகையிலும், அவர்கள் வழிபடும் அக்கினி குண்டத்தையும்; மகாலட்சுமியையும்; அவர்கள் வணங்கும் குருவின் பெயரை இழிவுபடுத்தியும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி, தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது இந்திய தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ல் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வேளச்சேரி போலீசார், நடிகர் சூர்யா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் கோரி ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், இந்தப் புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் காலண்டர் இடம்பெற்றுள்ள சர்ச்சை காட்சி நீக்கப்பட்டுள்ளதாகவும், வன்னிய சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூற, எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் தரப்பில், வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவித்து இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த இடையீட்டு மனுவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
இதை ஏற்று சூர்யா மற்றும் ஞானவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, ஜூலை 21-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை இந்த வழக்கில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.