சென்னை மெரினா கடற்கரைக்கும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைரவிழா நினைவு வளைவிற்கும் நடுவில் கட்டப்பட்டிருக்கும் நேப்பியர் பாலத்தில் சதுரங்க பலகை போல வர்ணம் பூசப்பட்டுள்ளது.
44ஆவது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மகாபலிபுரத்தில் ஜூலை 28ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. 2,000க்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்க உள்ளனர். சுமார் 100 ஆண்டுகால செஸ் ஒலிம்பியாட் வரலாற்றின் முதன்முறையாக, இந்தியா விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடக்கவிருக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு மொத்தம் 188 நாடுகள் பதிவு செய்துள்ளன.
சமீபமாக, சென்னை நகரின் அடையாளமாக விளங்கும் நேப்பியர் பாலத்தில் சதுரங்கப் பலகை போன்று வரையப்பட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
ட்விட்டரில் பரவலாக பகிரப்பட்ட விடியோவாக மாறிய நிலையில், பொதுமக்கள் நேப்பியர் பாலத்திற்கு சென்று செல்பி எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் போக்குவரத்து பெருமளவு பாதிப்படையும் நிலையும், குற்றவாளிகள் அதிகம் நடமாடும் இடமாக இருக்கும் அபாயத்தினால், காவல்துறை மக்களை எச்சரித்த வண்ணம் இருக்கிறார்கள்.
நான்கு சக்கர வாகனங்களில் வரும் மக்கள் பாலத்திலேயே தனது வண்டியை நிறுத்தி புகைப்படம் எடுப்பது போக்குவரத்தை பாதிக்கிறது என்று வருத்தமளிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பார்வையாளர்களிடம் பேசியபோது, “சென்னையில் நடக்கின்ற முக்கிய நிகழ்வுகளுக்கு சுவரோவியங்கள், சிலைகள் வைப்பது போன்ற செயல்களை முன்னெடுப்பது ஒரு சமுதாயமாக ஒற்றுமைத்துவத்தை உறுதி செய்கிறது. தற்போது நடக்கவிருக்கும் ஒலிம்பியாட் போட்டிக்கு ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்” என்று கூறுகின்றனர்.
மேலும், “சாலையில் சதுரங்க பலகையின் ஓவியம் வரைந்ததால் மக்களை மிகவும் கவர்கிறது. இதனால் போக்குவரத்து பாதிப்படைகிறது. மேலும், ஓட்டுநர்களின் கவனம் சிதறும் அபாயம் உள்ளது” என வருத்தமளிக்கின்றனர்.