கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பில் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி 12ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 13-ம் திகதி, பள்ளி விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி, உடலை வாங்காமல் உறவினர்கள் தொடர்ந்து 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன என்று பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிக்கை கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டுவருகிறது.
இதையடுத்து இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பொலிசார் மீது கற்களை வீசி தாக்கிய போராட்டக்காரர்கள், பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பொலிஸ் வாகனம் தீவைக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.
இந்த நிலையில் மாணவி உயிரிழந்த வழக்கில், அந்தப் பள்ளியின் வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் தாயார் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் இரண்டு ஆசிரியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் மாணவியை திட்டியதாக புகார் எழுந்துள்ளது.பள்ளியின் தாளாளர், செயலாளர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.