நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று முதல் நடைபெற துவங்கியுள்ளது. இத்தொடரில் இன்று மக்களவை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தமிழில் வங்கிப் பரிவர்த்தனை மேற்கொள்வது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் உள்ள வங்கி கிளைகளில் தமிழிலே பரிவர்த்தனை செய்ய வழிவகை செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
“தமிழ் மொழி மூலம் வங்கிகளிலே பரிவர்த்தனை செய்ய விரும்புவர்களுக்கு வசதியாக ஏற்பாடு செய்யப்படும். மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் தமிழிலேயே பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணிபுரியும் போது அவர்களுக்கு தமிழ் மொழி பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளிலே உள்ள பெயர்பலகைகள் மற்றும் அறிவிப்புகள் தமிழிலே இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வங்கி கிளைகளில் உள்ள படிவங்கள் மற்றும் தகவல்கள் தமிழிலேயும் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏடிஎம்களிலும் தமிழில் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார் நிர்மலா சீதாராமன். தமிழ் மட்டும் தெரிந்தவர்களுக்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் வங்கி பரிவர்த்தனை செய்வது சிரமம் என்ற புகார் இருந்து வரும் நிலையில் மக்களவையில் விரிவான விளக்கத்தை அவர் அளித்தார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM