திடீரென உதயநிதிக்கு எதிராக ட்விட்டரில் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்: என்ன காரணம்?

சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டம் கலவரமாக மாறி பற்றி எரிந்தது. மறுபுறம், ட்விட்டரில், திடீரென ரஜினி ரசிகர்கள் உதயநிதிக்கு எதிராக கொந்தளித்து ட்ரெண்ட் செய்தனர். என்ன காரணம்?

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், நீதிக்கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, மாணவியின் மரணம் குறித்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட 128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல, பள்ளி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) தாய்லாந்து வழியாக லண்டன் சென்றதாக தகவல் வெளியானது. கள்ளகுறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி போராட்டம் கலவரமாக மாறி பற்றி எரிந்துகொண்டிருக்க ‘சின்னவர்’ உதயநிதி ஸ்டாலின் எங்கே என்று பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி விமர்சித்தனர்.

இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி. மாணவிகளுக்கு பாதுகாப்பான பள்ளிச்சூழலை அமைத்து தருவது அனைவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படுவோம்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் திடீரன #நான்தான்பாஉதவாக்கரைஉதய் மற்றும் #நான்தான்டாரஜினிகாந்த் ஆகிய ஹேஷ்டேக்குகளில் உதயநிதி ஸ்டாலினை ரஜினி ரசிகர்கள் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்து ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹேஷ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்துக்கு வந்தது.

ரஜினி ரசிகர்கள் திடீரென உதயநிதிக்கு எதிராக கொந்தளிக்க என்ன காரணம் என்று பதிவுகளை கவனித்தபோதுதான் விடை தெரிந்தது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. அதில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். அப்போது, பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறிய நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ஒரு நல்ல விஷயத்துக்காக மக்கள் 100 நாள் போராட்டம் நடத்தினார்கள். கலெக்டர் ஆஃபிசை தாக்கியது. குடியிருப்புப் பகுதிகளை எரித்தது அப்பாவி மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள். அவர்களுடைய வேலைதான் இது. போராட்டம் நடத்தும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த கருத்துக்கு அன்றைக்கு திமுகவினரும் அவர்கள் கூட்டணி கட்சியினரும் கடுமையாக விமர்சித்தார்கள்.

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதில், சமூக விரோதிகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாறி துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, ரஜினி கூறியது எவ்வளவு உண்மையானது என்று ரஜினி ரசிகர்கள் பதிவிட்டனர். மேலும், உதயநிதியை விமர்சித்து பதிவிட்டு கொந்தளித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.