ஆன்லைன் டேட்டிங் செயலிகள் இணையத்தில் குவிந்து உள்ளன என்பதும் அவற்றை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
ஆனால் இந்திய அரசு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும் என்று ஆன்லைன் டேட்டிங் முறையை ஊக்குவித்து வருகிறது.
ஆன்லைன் டேட்டிங்கை எந்த சமூகத்திற்காக அரசு ஊக்குவிக்கின்றது என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம்
மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் இந்தியாவில் பார்சி மக்களை ‘மீட்டெடுக்க’ ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. பார்சி சமூகத்தில் தகுதியான வயது வந்தவர்களில் 30 சதவீதம் பேர் திருமணமாகாதவர்கள் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதனால் மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகம் ‘ஜியோ பார்சி’ என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தால் பார்சி ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ‘ஆன்லைன் டேட்டிங்’ மற்றும் திருமண ஆலோசனைகளை ஊக்குவிக்கிறது.
பிறப்பு-இறப்பு சதவிகிதம்
இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைப்புகளில் ஒன்றான பார்ஸர் அறக்கட்டளையின் இயக்குநர் ஷெர்னாஸ் காமா கூறுகையில், பார்சி சமூகத்தில் மொத்த கருவுறுதல் விகிதம் ஒரு ஜோடிக்கு 0.8 என சராசரியாக இருப்பதால், பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கும் குழந்தைகளை பெறுவதற்கும் ஊக்குவிப்பது அவசியம் என்று கூறினார். ஒவ்வொரு ஆண்டும் 200 முதல் 300 குழந்தைகள் பிறப்பதாகவும், அதே நேரத்தில் 800 பார்சிகள் இறக்கின்றனர் என்றும், இது இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் நிலைமையை ஒப்பிடுகையில் மோசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பார்சி மக்கள் தொகை
புதிய தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆய்வின்படி (NHFWS), மொத்த கருவுறுதல் விகிதம் இந்து சமூகத்தில் 1.94, முஸ்லீம் சமூகத்தில் 2.36, கிறிஸ்தவ சமூகத்தில் 1.88 மற்றும் சீக்கிய சமூகத்தில் 1.61 என உள்ளது. ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் பார்சி சமூகத்தின் மக்கள் தொகை 57,264 ஆக இருந்தது என தெரிகிறது. ஆனால் கடந்த 1941ஆம் ஆண்டில் பார்சி இன மக்கள் தொகை 1,14,000 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட்
சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் நவம்பர் 2013ஆம் ஆண்டு ‘ஜியோ பார்சி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனால் பார்சி சமூகத்தின் மக்கள்தொகையை சமநிலைப்படுத்தவும், மொத்த கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்கவும், ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 முதல் 5 கோடி வரை பட்ஜெட் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜியோ பார்சி’ என்ற திட்டம் தொடங்கப்பட்டதால் இந்த ஆண்டு ஜூலை 15 வரை 376 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இது ஒவ்வொரு ஆண்டும் பார்சி சமூகத்தில் பிறக்கும் சராசரி 200 குழந்தைகளை விட அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருமணமாகாதவர்கள்
பார்சி சமூகத்தில் குறைந்த குழந்தை பிறப்புக்கு திருமணமாகாத பெரியவர்கள் தான் பெரிய காரணம் என்றும், பார்சி சமூகத்தில் 30 சதவீத பெரியவர்கள் திருமணத்திற்கு தகுதி பெற்றிருந்தாலும் திருமணமாகாதவர்களாக உள்ளனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
திருமண வயது
மேலும் திருமணம் செய்துகொள்பவர்களில் சுமார் 30 சதவீதம் பேருக்கு சராசரியாக ஒரு குழந்தை மட்டுமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 30 சதவீத மக்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் அவர்களால் குழந்தை பெற்று கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. பார்சி சமூகத்தில் திருமணம் செய்யும் பெண்களின் சராசரி வயது 28 ஆகவும், ஆண்களின் சராசரி வயது 31 ஆகவும் உள்ளது
என்ன காரணம்?
திருமணம் செய்யாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம் இளைஞர்களிடையே, குறிப்பாகப் பெண்களிடையே உள்ள சுதந்திர உணர்வுதான். முதியவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. ஒவ்வொரு இளம் தம்பதியினருக்கும் எட்டு முதியவர்களை பராமரிக்கும் பொறுப்பு உள்ளது என்பதுதான் தற்போதைய நிலை. 10 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு அரசு மாதந்தோறும் ரூ.4,000 உதவித் தொகை வழங்கியும் முதியவர்களைக் கவனிக்க இந்த தொகை போதுமானதாக இல்லை என லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் இணைப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் டேட்டிங் செயலி
பார்சி இளைஞர்களை திருமணம் செய்து கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றாக ஆன்லைன் டேட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது நல்ல பலனை தந்துள்ளது என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் டேட்டிங் முறையை பயன்படுத்தி திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களின் விருப்பு வெறுப்புகள், அவர்களின் எதிர்கால வாழ்க்கை துணையிடமிருந்து அவர்களின் எதிர்பார்ப்புகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேருக்கு நேர் சந்திப்பு
இந்த தகவல்கள் மூலம் திருமணம் செய்ய விரும்பும் பார்சி இன மக்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணையை தேர்வு செய்வதற்கான தளமாக இந்த ஆன்லைன் டேட்டிங் முறை விளங்குவதாக கூறப்படுகிறது. மேலும் திருமண ஆலோசனையின் கீழ், நேருக்கு நேர் சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வெற்றி
இதுகுறித்து ஷெர்னாஸ் மேலும் கூறியபோது, ‘திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று உறுதியாக இருக்கும் திருமணத்திற்கு தகுதியானவர்களிடம் தங்கள் மனதை மாற்றிக் கொள்ளுமாறு அறிவுரை கூறுவதாவும், இதில் நாங்கள் கண்ணியமான வெற்றியை அடைந்துள்ளோம் என்றும் கூறினார். வயதான காலத்தில் திருமணம் செய்துகொள்வதால் குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
பழமைவாதம்
சமூக பழமைவாதமும் பார்சி சமூகத்தில் மக்கள்தொகை சமநிலையை பராமரிப்பதில் பெரும் சவாலாக உள்ளது. உதாரணமாக, ஒரு பார்சிப் பெண் வேற்று மதத்தை சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டால், தம்பதியரை அந்த சமூக ஏற்று கொண்டாலும் அவர்களது குழந்தைகளை ஏற்று கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன. இத்தகைய பிரச்சனைகளை மத அமைப்புகள் மற்றும் நீதிமன்றங்கள் தான் தீர்க்க வேண்டும் என்றும் ஷெர்னாஸ் தெரிவித்தார்.
Government Encourages Online Dating To Bump Up Parsi Population
திருமணத்தை அதிகரிக்க ஆன்லைன் டேட்டிங்கை ஊக்குவிக்கும் அரசு… யாருக்காக தெரியுமா?