புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜெகதீப் தன்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜ தலைவர் ஜேபி நட்டா, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லலன் சிங், உள்ளிட்டோரும் ஜெகதீப் வேட்பு மனு தாக்கல் செய்த போது உடன் இருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பின் பேட்டி அளித்த தன்கர், ‘‘என்னை போன்ற எளிமையான பின்னணி கொண்ட ஒருவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது. விவசாய குடும்பத்தை சேர்ந்த என்னை போன்ற ஒருவருக்கு இதுபோன்ற வரலாற்று வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் அவரது தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் மதிப்பை உயர்த்த நான் எப்போதும் பாடுபடுவேன்’’ என்றார். *இல.கணேசன் பதவியேற்றார்துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெகதீஷ் தன்கர் மேற்கு வங்க ஆளுனர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்த மாநிலத்தின் புதிய ஆளுனராக இல. கணேசன் நேற்று பதவியேற்றார். அவருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தற்போது மணிப்பூர் ஆளுனரான இல.கணேசன் கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க ஆளுனர் பொறுப்பையும் கவனிப்பார்.