புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் 25 பேர் நேற்று முறைப்படி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
பஞ்சாப் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். ஏற்கெனவே பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் தலைவராக உள்ள ஹர்பஜன் சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை தேர்தலுக்கு முன்பு சந்தித்தார். அவர் காங்கிரஸில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடலாம் என தகல்கள் வெளியாகின. ஆனால் அதை ஹர்பஜன் சிங் இதனை திட்டவட்டமாக மறுத்ததுடன் ஆம் ஆத்மியில் இணைந்து போட்டியிட்டார். அதில் வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில், ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுகொண்டார் ஹர்பஜன். தனது பதவியேற்பு உறுதிமொழியில், “அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் சபையின் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாப்பேன். பஞ்சாப் மற்றும் தேசத்து மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்வேன். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்” என்று தெரிவித்தார். இந்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்திலும் ஹர்பஜன் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக, நேற்றைய கூட்டத்தில் ஹர்பஜன் உடன் சேர்த்து மொத்தம் 25 பேர் ராஜ்ய சபா உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரம், கபில் சிபல், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிரபுல் படேல், சஞ்சய் ராவத் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
அதேநேரம், இசையமைப்பாளர் இளையராஜா, பிரபல முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் சில காரணங்களால் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்கவில்லை.