தேசிய பங்குச்சந்தையின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ஆஷிஷ் குமார் சவுகான் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஆஷிஷ் குமார் சவுகான், தற்போது பிஎஸ்இயின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார். கடந்த பத்தாண்டுகளாக இவர் பிஎஸ்இயின் தலைமை பொறுப்பில் இருக்கிறார். இவரது பதவி காலம் வரும் நவம்பரில் முடிவடைகிறது. ஏற்கெனவே பத்தாண்டுகள் பதவியில் இருந்திருப்பதால் மீண்டும் மறுநியமனம் செய்வதற்கு வாய்ப்பு இல்லை. அதனால் என்.எஸ்.இ.க்கு விண்ணப்பித்தார். என்.எஸ்.இயின் நிர்வாக இயக்குநர் விக்ரம் லிம்யேயின் பதவி காலம் ஜூலை 16-ம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மார்ச் 4-ம் தேதி இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் என்.எஸ்.இயின் தொடக்க கால முக்கியமானவர்களில் ஆஷிஷ்குமார் சவுகானும் ஒருவர். இவர் 1992-ம் ஆண்டு முதல் 2000 ஆண்டுவரை என்.எஸ்.இ இருந்தார். இதற்கடுத்து 2000-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரிலையன்ஸ் குழுமத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார். தற்போது அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என்.எஸ்.இ தலைமை பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
சித்ரா ராமகிருஷ்ணா 2013-ம் ஆண்டு தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கோலோகேஷன் சிக்கல் ஏற்பட்டதால் இவர் பதவி விலக நேரிட்டது. அதனை தொடர்ந்து விக்ரம் லிமயே நியமனம் செய்யப்பட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM