திருமலை: நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் சம்பளத்தால் அதிக செலவு ஏற்பட்டுள்ளதால், வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு செய்துள்ளனர். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர் தில் ராஜூ தலைமையில் ஓடிடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி 10 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தில், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிக சம்பளம் கேட்பதால், சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் பெரும்பாலான தயாரிப்பாளர்களால் அவர்களுக்கு அதிக சம்பளத்தை வழங்க முடியவில்லை. மேலும், அவர்களால் அதிக செலவும் ஏற்படுகிறது. எனவே, செலவு குறைப்பது தொடர்பாக விரைவில் முடிவு எடுத்தாக வேண்டும் என்று பல தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்து, இந்த விவகாரத்தில் விரைவில் முடிவுஎடுக்க வேண்டும். சுமார் 2 மாதங்கள் கடந்தாலும் படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று, தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.