மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் பலியானார்கள். 15 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய பேருந்து, மகாராஷ்டிர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தாகும். இது இந்தூரிலிருந்து புனேவுக்குப் போய்க் கொண்டிருந்தது. ஆற்றில் உள்ள பாலத்தில் பஸ் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தடுமாறி தலைகீழாக ஆற்றில் கவிழ்ந்தது. பாலத்தின் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்து ஆற்றில் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் உள்ள கல்கட் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. விபத்தில் 13 பேர் நீரில் மூழ்கி பலியாகி விட்டனர். 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பஸ் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு விட்டது. விபத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேருந்தில் 50 முதல் 60 பயணிகள் வரை இருந்ததாக கூறப்படுகிறது. எனவே உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து முழு வீச்சில் நடந்து வருகின்றன.