புதுடெல்லி: இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் 32 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து மசோதாக்கள் மீதும் விவாதம் நடத்த விரும்புவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், காங்கிரஸ் எம்பி.க்கள் மல்லிகார்ஜூன கார்கே, அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்பி.க்கள் டிஆர்.பாலு, திருச்சி சிவா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘இந்த கூட்டத் தொடரில் 32 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் 14 மசோதாக்கள் தயாராக உள்ளன. இவை அனைத்தின் மீதும் ஜனநாயக ரீதியில் விவாதம் நடத்தப்பட உள்ளது’’ என்றார். அதே நேரம், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான அக்னிபாதை திட்டம், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வளர்ச்சி, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அரசு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, ஆகியவற்றை தவறாக பயன்படுத்துதல், நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட 13 பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.