சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாடப் புத்தகங்களிலும், சென்னை தெரு வீதிகளிலும் தலைவர்கள் பெயரின் பின்னொட்டிலிருக்கும் சாதிப்பெயர்கள் நீக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் புதியதாக 100 வீடுகள் அடங்கிய பெரியார் சமத்துவபுரத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் இனி கைகளில் எந்த விதமான கயிறும் கட்டக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. திரைப்படத்துறையிலும் சாதி எதிர்ப்பு படங்கள் ஹிட் அடிக்கின்றன, அரசால் அவை பாராட்டப்பட்டு வருகின்றன. அரசு ஒருபுறம் சாதி ஒழிப்புக்காக சில நடவடிக்கைகளை செயல்படுத்திக்கொண்டிருக்க, தனிநபர்களும் `சாதி மதம் அற்றவர்’ எனச் சான்றிதழ் வாங்கும் நிகழ்வுகளும் பேசுபொருளாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த முன்னெடுப்புகள் பாராட்டுக்குரியது என்றாலும்கூட உண்மையில் இதனால் மட்டும் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டுவிடுமா? இந்த நடவடிக்கைகள் போதுமானதா? இதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?
`பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டும்!’
சமீபத்தில் கோவையைச் சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவர் தனது மூன்று வயது மகளை பள்ளியில் சேர்ப்பதற்காக `சாதி மதம் அற்றவர்’ என சான்றிதழ் வாங்கியிருக்கிறார். இது இந்திய அளவில் பேசுபொருளாகி, வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதுகுறித்து அவரிடம் பேசியபோது, “சாதியில்லா சமுதாயம் உருவாகவேண்டும் என்பது என் கனவு. சமத்துவம் போதிக்கும் பள்ளிக்கூடத்துக்கு என் மகள் சாதி, மத அடையாளத்துடன் செல்லவேண்டாம் என நினைத்தேன். ஆனால், என் மகளை சேர்க்கச்சென்ற எல்லாப் பள்ளிக்கூடத்திலும், விண்ணப்பத்தில் சாதியை குறிப்பிடச்சொன்னார்கள்.
1973-ம் ஆண்டு அரசாணையில் கல்வி நிலையங்களில் சாதி குறிப்பிடவேண்டிய கட்டாயமில்லை என கூறப்பட்டுள்ளது. அதுகுறித்தும் யாருக்கும் விழிப்புணர்வு இல்லை; எனவே, விழிப்புணர்வு ஏற்படுத்தவும், என் தனிப்பட்ட விருப்பத்திற்காகவும் ஏற்கெனவே `NoCaste NoReligion’ சான்றிதழ் வாங்கியவரைக் குறிப்பிட்டு, என் மகளுக்கு இந்தச் சான்றிதழ் வாங்கியிருக்கிறேன். இதை சாதி ஒழிப்புக்கான முதல்படியாக பார்க்கிறேன்! பள்ளி கல்லூரி விண்ணப்பங்களில் `சாதி, மதம் இல்லை’ என்ற ஆப்ஷன் கொடுக்கவேண்டும். சாதி அடிப்படையில் கிடைக்கக்கூடிய எந்த சலுகையும் எனக்குத் தேவையில்லை; இன்றையச் சூழலில் அது பொருத்தமானதாகவும் இல்லை; ஏனென்றால் எல்லா சாதியிலும் ஏழை, பணக்காரர்கள் என எல்லா மாதிரியான மக்களும் இருக்கிறார்கள். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களின் கருத்தாக இருக்கிறது!” என்றார்.
`சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்!’
“சாதி மதமற்றவர் என சான்றிதழ் வாங்குவதையும், சாதிச் சான்றிதழை ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று நினைப்பதையும்போன்ற ஒரு முட்டாள்தனம் வேறெதுவுமில்லை; இது அடிப்படைப் புரிதலற்றவர்களின் பேச்சு” என்கிறார் எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான ஷாலின் மரிய லாரன்ஸ். மேலும் அவர், “இந்தியாவில் பேப்பர் வருவதற்கு முன்பிருந்தே, 2000 ஆண்டுகளாக சாதி இருக்கிறது. சாதிச் சான்றிதழ் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. சாதிச் சான்றிதழில் என்ன இருக்கிறது என்பது எனக்கும், நான் அதை உபயோகப்படுத்திய அலுவலகங்களுக்கும் மட்டுமே தெரியும். அதை பொது மக்கள் பார்ப்பதில்லை. கையால் மலம் அள்ளுபவர் “சாதியற்றவர்” என்று சான்றிதழ் வைத்துக் கொண்டாலும், அவர் யார் என்று கண்டுபிடிப்பது பெரிய விஷயம் அல்ல. ஊர், சேரி, காலனி இருக்கும்வரை “சாதியற்றவர்” என்று முன்னூறு சான்றிதழ் வைத்துக்கொண்டாலும் சாதியை 5 நொடியில் கண்டுபிடித்துவிட முடியும். ஆக வெறும் பேப்பரில் சாதி ஒழிப்பது என்பது கண்ணை மூடி உலகம் இருண்ட கதைதான்! முதலில் இட ஒதுக்கீடு என்பது சலுகையே கிடையாது; அது உரிமை! பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிப்பது, இந்திய சமூக சிக்கல் பற்றி அறியாதவர்களின் மாபெரும் அரசியல் பிழை; பொருளாதார அடிப்படையில் முற்பட்ட சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியிருப்பது மிகப்பெரிய தவறு!
அதேபோல, இந்திய அரசியலமைப்பிலேயே, இங்கு யாரெல்லாம் முஸ்லிம், கிறித்துவர், பார்சி, பௌத்தம் இல்லையோ அவர்கள் அனைவருமே இந்து எனச்சொல்கிறது. அப்படிப்பார்த்தால் நாத்திகர்கூட இந்தியாவில் இந்துதான்! ஆக, சான்றிதழில் பெயர்மாற்றிக்கொள்வதால் எந்த பயனும் இல்லை! உண்மையில் சாதியை ஒழிக்கவேண்டுமானால் கோயில்களில், பள்ளிக்கூடங்களில் இருக்கிற தீண்டாமையை, கிராமங்களில் உள்ள இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு முறையை ஒழிக்க வேண்டும். சாதி சங்கங்களை தடை செய்யவேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணத்தை ஊக்குவிக்கவேண்டும். ஆவணப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும்! ஆனால் இவற்றையெல்லாம் இந்த திராவிட ஆட்சியாளர்கள் செய்யமாட்டார்கள். சாதி ஓட்டு வங்கிக்காக, சாதித்தலைவர்களின் ஜெயந்தி விழாவுக்கு மாலை போடவும், சாதிக் கட்சிகளுடன் கூட்டணி சேரவும்தான் முன் நிற்கிறார்கள். பிறகு எப்படி சாதி ஒழியும்?” என கேள்வி எழுப்பினார்.
`சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கவேண்டும்!’
`ஆதலால் காதல் செய்வீர்’ அறக்கட்டளை நிறுவனரும், நூற்றுக்கும் மேற்பட்ட கலப்பு திருமணங்களை நடத்தி வைத்திருப்பவருமான வழக்கறிஞர் செ.குணசேகரனிடம் பேசினோம். “கலப்பு திருமணங்களால் சாதி முழுவதுமாக ஒழிந்துவிடாது. திருமணத்துக்குப் பிறகு தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகள் இருவரில் ஒருவரின் சாதியில்தான் தொடர்கிறார்கள். ஆனால், சாதிக் கலப்பு ஏற்படுவதால் வரட்டு கலாச்சார கட்டமைப்பு சிதைவடைவதோடு, சாதிய உணர்வை நீர்த்துப்போகச்செய்யும் தலைமுறையினர் உருவாகுவார்கள். சாதி அமைப்பு கட்டிக்காக்கப்படுவதே அகமணமுறையில்தான்! அதை ஒழிக்க அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! அதிகபட்சமாக, கலப்பு திருமணம் செய்தால் 50,000 ஊக்கத்தொகை கொடுக்கிறது அரசு; அதை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்? பெரும்பாலானோருக்கு அந்தத்தொகையும் கிடைப்பதில்லை; அதை பெறுவதற்கே 20,000 லஞ்சம் கொடுக்கவேண்டிய நிலைதான் இருக்கிறது!
`கலப்பு திருமணம் செய்த இணையர் இருவரில் ஒருவருக்கு கட்டாயம் அரசு வேலை’ என சட்டம் கொண்டுவந்தால் பத்தாண்டுகளில் பாதி திருமணங்கள் சாதி மறுப்பு திருமணமாகத்தான் இருக்கும். படிப்படியாக இது உயர்ந்து 25 ஆண்டுகளில் அடுத்த தலைமுறையே சாதி உணர்வற்று வளரும். இவற்றை செய்தாலே சாதி ஒழிந்துவிடும்; ஆனால் இங்கு சமூகநீதி என்பது தி.மு.க அரசின் தியரியாக இருக்கிறதே தவிர, நடைமுறையில் அவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை! பெரும்பான்மை சமூகங்களின் வாக்குகள் இல்லாமல் போய்விடும் என அஞ்சுகிறது தி.மு.க!
அதேபோல, பெரியார் சமத்துவபுரத்துக்கும் நகரங்களில் இருக்கும் லைன் வீடுகளுக்கும் அரசாங்கம்-தனியார் என்பதைத்தாண்டி வேறென்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டிலும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள்தான் கூட்டாக வசிக்கிறார்கள்; சமத்துவபுரத்தில் வசிக்கிறோம் என்பதற்காக அவர்கள் சாதிமாற்றி திருமணம் செய்துகொள்வதில்லை; உண்மையில் கலப்பு திருமணம் செய்தவர்ளுக்குத்தான் அங்கு வீடுகள் ஒதுக்கியிருக்கவேண்டும். இல்லையெனில் தனியாக கலப்புத் திருமண இணையர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு தனி பாதுகாப்பு மையத்தை, காவல்துறை பாதுகாப்போடு மாவட்டம்தோறும் அரசு ஏற்படுத்த வேண்டும்! சட்டங்களால் மட்டுமல்லாமல், நடைமுறை சாத்தியமுள்ள திட்டங்களால்தான் மாற்றத்தைக் கொண்டுவரமுடியும்!” என்கிறார்.
`அரசுக்கு பரிந்துரைப்போம்!’
இந்தக் கோரிக்கைகள், யோசனைகள் குறித்து, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட `சமூகநீதி கண்காணிப்புக்குழுவின்’ தலைவர் சுப. வீரபாண்டியனிடம் விளக்கம் கேட்டோம்! “பாட புத்தகங்களில், தெருக்களில் சாதிப்பெயரை நீக்குவது சரியான நடவடிக்கை; அதேசமயம் பெயரை நீக்குவதால் மட்டுமே சாதி ஒழிந்துவிடாது! அது ஒவ்வொருவருடைய மனதிலிருந்தும் நீக்கப்பட வேண்டும். சாதி, மூளையில் போடப்பட்டிருக்கும் ஒரு கனத்த விளங்கு; அவ்வளவு எளிதில் அதை அகற்ற முடியாது; ஆனால் அகற்றவேண்டிய இறுதி இலக்குக்கான ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் இருக்கும்.
அதேபோல `மதமற்றவர்’ என்ற சான்றிதழை 100% ஏற்கலாம். ஆனால் `சாதியற்றவர்’ என சான்றிதழ் வாங்கவேண்டாம்! காரணம், `சாதியற்றவர்’ என்ற தனிப்பிரிவே இல்லை; அது நேரடியாக O.C (Open Competition) பிரிவுக்குதான் போகும். இட ஒதுக்கீடு இருக்ககூடிய சமூகத்தைச் சேர்ந்தவர் விட்டுக்கொடுப்பதால், அதே சமூகத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற பார்வையில், தனிப்பட்ட முறையில் விரும்புபவர்கள், வசதிவாய்ப்பு உள்ளவர்கள் அப்படி செய்துகொள்ளலாம்; ஆனால், எல்லாரும் அப்படி செய்துவிடவே கூடாது. அப்படி செய்தால் நாம் போராடிப்பெற்ற இட ஒதுக்கீட்டை இழந்துபோவோம்.
மேலும், பெரியார் சமத்துவபுரம் என்ற நோக்கம் சிறந்தது. ஆனால், எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தும்போது நடைமுறையில் சில குறைபாடுகள் வரும். அதேபோல சமத்துவபுரங்களிலும் குறைபாடுகள் இருக்கிறதுதான்! அவற்றை அரசின் கவனத்துக்கு கொண்டுசென்று சரிசெய்வோம்! மேலும், காவல்துறை பாதுகாப்புடன் கலப்பு திருமணம் புரிந்தவர்களை சமத்துவபுரங்களில் அல்லது மாவட்ட வாரியான பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்து தங்க வைப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது! அவர்களுக்கு சமூகப் பாதுகாப்புதான் அவசியம். காவல்துறை அதில் கவனமாக இருக்கவேண்டும்! அதேசமயம், கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களுக்கு அரசு வேலைகளில் 1 % இட ஒதுக்கீடு கொடுக்கவேண்டும்; சாதி ஆணவப்படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்பதையும் நாங்கள் ஏற்கிறோம், முன்மொழிகிறோம்! இதுகுறித்த கோரிக்கைகள், புகார்கள் எங்களுக்கும் வருகிறது. நிச்சயமாக எங்கள் குழுவின்மூலம் முடிவெடுத்து இவற்றை அரசுக்கு பரிந்துரைப்போம்!” என்றார் உறுதியாக.
இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வின் வினாத்தாளில் `தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்ற கேள்வி இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.
`எப்போது ஒழியும் இந்த சாதி பேதம்?’