சென்னை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (ஜூலை 18) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் பள்ளிகள் அறிவித்தன. அதேவேளையில், தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதன்படி மெட்ரிக் பள்ளிகள் 89 சதவீதம், நர்சரி மற்றும் ப்ரைமரி பள்ளிகள் 95 சதவீதம், சிபிஎஸ்இ பள்ளிகள் 86 சதவீதம் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், நாகை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் இயங்கின. குறைந்தபட்சமாக தருமபுரியில் 16 சதவீதம், நாமக்கலில் 32 சதவீத பள்ளிகள் மட்டுமே இயங்கின. கள்ளக்குறிச்சியில் 92 சதவீத பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்தது.
மேலும், வேலை நிறுத்தம் தொடர்பாக பள்ளி கல்வி துறை அதிகாரிகள், தனியார் பள்ளி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சவாத்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்று நாளை முதல் பள்ளிகள் இயக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்ததாக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.