புதுடெல்லி: வாடகை வீட்டில் ‘லிவிங் டூகெதர்’ ஆக வாழ்ந்த இளம்பெண்ணை, அவரது காதலன் கழுத்தை நெரித்து கொன்ற வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். தலைநகர் டெல்லியின் கோவிந்தபுரியை சேர்ந்த ஜூலேகா என்பவரும், ஓம்பிரகாஷ் என்பவரும் திருமணம் செய்து கொள்ளாமல் (லிவிங் டூகெதர்) ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஓம்பிரகாஷுக்கும், ஜூலேகாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அதாவது பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த ஓம்பிரகாஷ், ஜூலேகாவின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அதன்பிறகு, ஜூலோகாவின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக தனது சகோதரர் ராஜ்குமார், நண்பர் சஞ்சய் ஆகியோரை ஓம் பிரகாஷ் அழைத்து வந்தார். மூன்று பேரும் சேர்ந்து, ஜூலோகாவின் சடலத்தை காரில் எடுத்து போட்டுக் கொண்டு கவுதம் புத் நகர் நோக்கிச் சென்றனர். யமுனா எக்ஸ்பிரஸ் சாலையின் சர்வீஸ் சாலையில் ஜூலோகாவின் உடலை வீசி சென்றனர். இந்நிலையில் தம்பதிகளாக வசித்து வந்த வாடகை வீட்டின் உரிமையாளர் பிரஜேஷ் என்பவர், கடந்த சில நாட்களாக ஜூலேகா வீட்டிற்கு வருவதில்லை என்றும், இதுதொடர்பாக ஓம்பிரகாஷை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து இன்ஸ்பெக்டர் யோகேந்திர குமார் தலைமையிலான தனிப்படையினர், ஜூலேகா மாயமானது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் கிடந்த பெண்ணின் சடலம் ஜூலேகாதான் என்பது தெரியவந்தது. அதையடுத்து ஜூலேகாவுடன் ‘லிவிங் டூகெதர்’ வாழ்க்கை வாழ்ந்த ஓம்பிரகாஷை தேடினர். அவன் மாயமான நிலையில், தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிபிடித்து கைது செய்தனர். அவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சகோதரர் ராஜ்குமார், நண்பர் சஞ்சய் ஆகியோரையும் கைது செய்தனர். ஜூலேகாவின் சடலத்தை வீசப் பயன்படுத்திய காரை மீட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், ஜூலேகாவை ஓம்பிரகாஷ் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.