லண்டன் : ‘பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பம் நிலவுவதால் மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்’ என, அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் நேற்று வரலாறு காணாத வகையில் கடும் வெப்பம் நிலவியது. இதையடுத்து பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்தது. கடும் வெப்பத்தால் மரணம் நிகழும் அபாயம் உள்ளதாக, வானிலை மையம் முதன் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுத்தது.
இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைமை அதிகாரி பென்னி என்டர்ஸ்பை கூறியதாவது:கடந்த, 2019ல் பிரிட்டனில், அதிகப்பட்சமாக, 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியது. இது, தற்போது 40 டிகிரி செல்சியஸ் அளவை நெருங்கியுள்ளது. எனினும், வெப்பம் 41 டிகிரியை தாண்டாது. பிரிட்டன் வரலாற்றில் முதன் முறையாக இத்தகைய வெப்பத்தை மக்கள் உணர உள்ளனர். இதனால் அவசியமின்றி வெளியே செல்வதை தவிர்க்கவும். மக்கள், வெயில் தாக்கம் குறைவான இடங்களில் இருப்பதும், நிறைய தண்ணீர் குடிப்பதும் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.
கடும் வெப்பம் காரணமாக ரயில் சேவைக்கான மின்சார கம்பிகள், ‘சிக்னல்’ சாதனங்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளதால், ரயில் வேகத்தை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவசியமிருந்தால் மட்டும் ரயில் பயணம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.”நிறுவனங்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க பணி நேரத்தில் மாற்றம் செய்யலாம்,” என, லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.சில பள்ளிகள், விளையாட்டு போட்டிகளை ரத்து செய்துள்ளன. சில பள்ளிகள் வெப்பத்தை தாங்கக் கூடிய குளிரும் விளையாட்டு ஆடைகளை குழந்தைகள் அணிய அறிவுறுத்தியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement