மதுரை: மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வெறும் ரூ.12 ஆயிரம் மட்டுமே சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதிஒதுக்கீடு செய்துள்ளது.
இதே கடந்த தமிழகத்துக்கு 2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.172 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தி ஃபேக்ட் (The Fact) அமைப்பின் சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர் எஸ்.கார்த்திக் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்ற தகவல்களை செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மத்திய அரசு ஆண்டுதோறும் மாநில சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கி வருகிறது. கடந்த 2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் ரூ.172,43,10,000 (நூற்று எழுபத்தி இரண்டு கோடியே 43 லட்சம் வரை) தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு நிதி ஒதுக்கி உள்ளது. கடைசி 4 ஆண்டுகளில் கடந்த 2018-19 முதல் 2021-22 வரையில் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் வீதம் நான்கு ஆண்டுகளுக்கு வெறும் ரூ.12 ஆயிரம் மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளனர்.
கடந்த 2016-17-ஆம் ஆண்டு மற்றும் 2017-18-ஆம் ஆண்டு ஆகிய நிதியாண்டுகளில் வெறும் 0 (பூஜ்ஜியம்) நிதி ஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் மத்திய அரசு சிறுபான்மையினருக்கான நலத்திட்ட நிதி ஒதுக்கீட்டை படிபடியாக குறைத்து வருவது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு நிதி ஒதுக்கீடுகளை தவிர்ப்பதால் மாநிலத்தில் பல ஆண்டுகளாக சிறுபான்மையினர் மக்களுக்காக பிரத்யோகமாக வழக்கத்தில் இருந்து வந்த கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு பணிகள் பாதியிலேயே முடங்கியுள்ளது.
மத்திய அரசு தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ.100 கோடி வரை நிதி ஒதுக்க வேண்டும். தமிழக முதல்வர், மத்திய அரசிற்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் எழுதி சிறுப்பு கவனம் பெற செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.