Morning Motivation: தலைவன் தன் மகனுக்கு சிபாரிசு செய்யலாமா?- ஆபிரஹாம் லிங்கன் அறிவுறுத்தும் பாடம்!

`அறிவு உங்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தரலாம்; ஆனால், குணம்தான் மரியாதையைப் பெற்றுத் தரும்.’ – புரூஸ் லீ

அதிகாரத்துக்கு வந்ததும் ஆட்டம் போடாதவர்கள் யாராவது உண்டா? உண்டு. வெகு சிலர் மட்டுமே அந்தப் பட்டியலுக்குள் அடங்குவார்கள். பாலிடிக்ஸோ… ஆபீஸில் பதவி உயர்வோ… அதிகாரம் கிடைத்ததும் ஆணவத்தில் ஆடாமல், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று உலகுக்கே பாடம் சொன்னவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஆபிரஹாம் லிங்கன்.

அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே அதிகம் விமர்சனத்துக்குள்ளானவர் லிங்கன். விறகு வெட்டி, படகோட்டி, பலசரக்குக்கடை ஊழியர், வக்கீல் எனப் பல வேலைகளைப் பார்த்துவிட்டு அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்தவர். எத்தனையோ தடைகளைத் தாண்டி உயரம் தொட்ட லிங்கனின் வாழ்க்கை வரலாறு எல்லோரும் படிக்க வேண்டிய பாடம்.

ஆபிரஹாம் லிங்கன்

ஆபிரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகி வெள்ளை மாளிகையில் குடியேறிவிட்டார். அவருக்கு ஒரு விஷயம் மட்டும் ரொம்ப உறுத்தலாக இருந்தது. குதிரைப்படை வீரர்கள் சிலர் எப்போதும் வாசலிலேயே காத்திருந்தார்கள். அவர் வெள்ளை மாளிகைக்குள் நுழையும்போதும், வெளியேறும்போதும் அந்தக் குதிரைப்படை விறைப்போடு அவருக்கு அணிவகுப்பு மரியாதை செய்யும்.

இரண்டு நாள் பார்த்தார் லிங்கன். குதிரைப்படையின் தலைவரைத் தன்னை வந்து பார்க்கச் சொன்னார்.

“வணக்கம் மிஸ்டர் பிரசிடென்ட்.’’

“வணக்கம். உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டுமே…’’

“சொல்லுங்கள்.’’

“நான் உள்ளே வரும்போதும், வெளியே போகும்போதும் குதிரைப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை செய்கிறார்களே… ஏன்?’’

“அது வெள்ளை மாளிகையில் வழக்கமாக நடைபெறும் ஒரு செயல். எல்லா ஜனாதிபதிகளுக்கும் இப்படி அணிவகுப்பு மரியாதை செய்வது இங்கே வழக்கம்.’’

“அந்த மரியாதையெல்லாம் எனக்கு வேண்டாம். நான் அரசனோ, குறுநில மன்னனோ அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களில் ஒருவன். புரிகிறதா… முதலில் குதிரைப்படை வீரர்களை அந்த இடத்திலிருந்து போகச் சொல்லுங்கள்.’’

“சரி.’’

****

ஆபிரகாம் லிங்கன்

ஸ்பிரிங்ஃபீல்டிலிருந்து ஒரு பழைய நண்பர் ஆபிரஹாம் லிங்கனைப் பார்க்க வெள்ளை மாளிகைக்கு வந்திருந்தார். அறை வாசலுக்கே வந்து அவரைக் கையைப் பிடித்து அழைத்துப் போனார் லிங்கன்.

வந்தவர், “குட் மார்னிங் மிஸ்டர் பிரசிடென்ட்’’ என்று சொன்னபடியே இருக்கையில் அமர்ந்தார்.

ஆபிரஹாம் லிங்கன் அவரை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். “ஸ்பிரிங்ஃபீல்டில் இருந்தபோது என்னை எப்படி அழைப்பீர்கள்?’’

வந்தவர் தயக்கத்தோடு சொன்னார்… “ `ஏப்…’ அல்லது `லிங்கன்’ என்று அழைப்பேன்.’’

`பிறகு… இப்போது மட்டும் ஏன் என்னை `பிரசிடென்ட் என்று கூப்பிடுகிறீர்கள்… எப்போதும்போல `ஏப்’ அல்லது `லிங்கன்’ என்றே கூப்பிடுங்கள். அதுதான் எனக்குப் பிடிக்கும்.’’

ஒரு நாட்டின் ஜனாதிபதி நினைத்தால் என்ன செய்ய முடியும்? என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் ஆபிரஹாம் லிங்கன், தன் சுயலாபத்துக்காகத் தன் ஜனாதிபதி பதவியை எப்போதுமே பயன்படுத்தியது கிடையாது.

லிங்கனின் மூத்த மகன் ராபர்ட். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம்பெற்றவர். அவருக்கு ஓர் ஆசை… `ராணுவத்தில் சேர வேண்டும்.’ லிங்கனிடம் வந்தார். விஷயத்தைச் சொன்னார்.

எத்தனையோ தலைவர்கள் தங்கள் வாரிசுகளை அரியாசனத்தில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறார்கள். ஆபிரஹாம் லிங்கன் நினைத்திருந்தால் அமெரிக்க யூனியன் படைக்கு, தன் மகன் ராபர்ட்டைத் தளபதியாகவே ஆக்கியிருக்க முடியும். அவர் அப்படிச் செய்யவில்லை.

“பார்க்கலாம்’’ என்று பதில் சொன்னார். ராபர்ட் போனதும் முதல் காரியமாக தலைமைத் தளபதி கிராண்டுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

`என் மகன் ராபர்ட் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்ய விரும்புகிறான். என்னை ஜனாதிபதியாக நினைத்துக்கொள்ளாமல், ஒரு நண்பராக நினைத்து நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும். மற்ற அதிகாரிகளுக்கு எந்தப் பாதகமும் இல்லாமல், ராணுவத்தில அவனுக்குப் பொருத்தமான வேலை ஏதாவது இருந்தால், அவனுக்குத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.’

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.