Naked Crepe: "இட்லி, தோசை"க்கு என்ன பெயர் பாருங்க.. இந்தியர்களை உலுக்கிய ஹோட்டல்!

அமெரிக்காவில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் இட்லி, தோசை, மசால் தோசை, சாம்பார் வடைக்கு அதன் ஒரிஜினல் பெயர்களை வைக்காமல் ஆங்கிலமயப்படுத்தி பெயர் வைத்திருப்பதால் அந்த ஹோட்டலுக்கு வரும் தென்னிந்தியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெயரில் என்ன இருக்கு என்று சொல்வார் ஷேக்ஸ்பியர். ஆனால் அதை அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு இந்திய உணவகம் அப்படியே எடுத்துக் கொண்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம், பரம்பரை பரம்பரையாக, பல காலமாக சொல்லப்பட்டு வரும் பெயர்களை அப்படியே குண்டக்க மண்டக்க மாற்றி வைத்து இந்தியர்களை அதிர விட்டுள்ளது அந்த ஹோட்டல்.

இந்தியன் கிரீப் கம்பெனி என்ற அந்த ஹோட்டலானது அமெரிக்காவின் ரெட்மாண்ட் நகரில் உள்ளது. மிகவும் பிரபலமான இந்திய ஹோட்டல் இது. இந்த ஹோட்டலில்தான் தற்போது இந்திய உணவு வகைகளின் பெயர்களை மாற்றி வைத்துள்ளனர்.

சாம்பார் இட்லிக்கு Dunked Rice Cake Delight என்று வாயில் வராத பெயரை வைத்துள்ளனர். அதை விடக் கொடுமை சாம்பார் வடைக்கு வைத்துள்ள பெயர்தான். அதற்குப் பெயர் Dunked Doughnut Delight என்பதாகும். என்ன கொடுமை சரவணன் இது என்று சொல்லத் தோன்றுகிறது.. அவசரப்படாதீங்க.. தோசைக்கு வைத்த பெயரைப் பாருங்க.

சாதா தோசைக்கு Naked Crepe என்று பெயர் வைத்து சும்மா அதிருதில்ல என்று கேட்க வைத்துள்ளனர். அப்ப மசாலா தோசைக்கு.. உங்க பீதி புரியுது பாஸ்.. அதுக்கு என்ன பெயர் தெரியுமா.. Smashed Potato Crepe.. ரொம்ப போட்டு நசுக்கிட்டாங்க பாருங்க!

இந்த பெயர் மாற்றம் பலரையும் உலுக்கியுள்ளது. குறிப்பாக ரெண்டு இட்லி, கூடவே கொஞ்சம் கெட்டிச் சட்னி என்று கெத்தா கேட்டு வாங்கிச் சாப்பிடும் தென்னிந்தியர்களை அதிர வைத்துள்ளது.. ஏய்யா.. ஏன் என்று பலரும் சமூக வலைதளங்களில் இந்த ஹோட்டல் நிர்வாகத்தை வெளுத்தெடுத்து வருகின்றனர்.

இதேபோலத்தான் பல்வேறு இந்திய உணவு வகைகளுக்கும் இஷ்டத்திற்கும் பெயரை ஆங்கிலமயமாக்கி வைத்துள்ளது இந்த ஹோட்டல் நிர்வாகம். ஆங்கிலேயர்களுக்குப் புரியும் வகையில் பெயரை மாற்றியிருந்தாலும் கூட அந்தப் பொருளின் மூலப் பெயரை ஏன் மாற்றினார்கள் என்றுதான் தெரியவில்லை. நம்ம ஊரில் குஷ்பு இட்லி, ஹன்சிகா இட்லி என்று மக்கள் விதம் விதமாக பெயர் வைத்து கலக்கிக் கொண்டுள்ள நிலையில் இப்படி “கிரீப்” என்று பெயர் வைத்து கிறுக்கப் பிடிக்க வச்சுட்டாங்களே!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.