குடியரசுத் தலைவர் தேர்தலில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.
இந்திய திருநாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இன்று நடைபெற்று வருகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் களத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குச்சீட்டு முறையில் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவை பிரதமர் நரேந்திர மோடி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் தங்களது வாக்கை பதிவு செய்தனர். தொடர்ந்து, பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதால், அவர் வெற்றி பெறுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.