அணி மாறும் எம்.பி.க்கள்… சின்னம் கேட்டு தேர்தல் கமிஷனை அணுகும் ஷிண்டே! – நெருக்கடியில் தாக்கரே

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் 20-ம் தேதி நடந்த சட்டமேலவை தேர்தலை தொடர்ந்து சிவசேனாவில் பிளவு ஏற்பட்டது. அதே போன்ற ஒரு நிலை இப்போது ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து இன்று சிவசேனா எம்.பி.க்கள் 12 பேர் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு டெல்லியில் வைத்து வெளியிடப்பட இருக்கிறார்கள் என்ற தகவலும் பரபரக்கிறது. இதற்காக ஏக்நாத் ஷிண்டே டெல்லி சென்று முதலில் பாஜக தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். அதனை தொடர்ந்து எம்.பி.க்கள் அணி மாறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே பெரும்பாலான எம்.பி.க்கள் டெல்லியில் இருக்கின்றனர். எம்.பி.க்கள் தைரியஷீல் சாம்பாஜிராவ் மானே, சதாசிவ் லோகண்டே, ஹேமந்த் கோட்சே, ஹேமந்த் பாட்டீல், ஸ்ரீகாந்த் ஷிண்டே, பாவ்னா காவ்லி, ராஜேந்திர காவிட், சஞ்சய் மான்லிக், ராகுல் ஷெவாலே உட்பட 12 பேர் ஏக்நாத் ஷிண்டேயுடன் தொடர்பில் இருப்பவர்கள் என்கிறார்கள். இதில் ராகுல் ஷெவாலே வெளிப்படையாக ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரேயிடம் கேட்டுக்கொண்டவர் ஆவார். அதோடு மத்திய அமைச்சர் ராவ்சாஹேப் தன்வேயும், “12 சிவசேனா எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டேயுடன் தொடர்பில் இருக்கின்றனர். அவர்கள் அணி மாற தயாராக இருக்கின்றனர். சிவசேனாவுக்கு மொத்தம் 19 எம்.பி.க்கள் இருக்கின்றனர்.

ஏக்நாத் ஷிண்டே

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா” என்று குறிப்பிட்டு இருந்தார். சிவசேனா எம்.பி.க்கள் 12 பேர் அணி மாறுவார்கள் என்ற வாதத்தை கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ராவத் மறுத்துள்ளார். மேலும், சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு எந்த இத அங்கீகாரமும் கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் 12 எம்.பி.க்களும் ஏக்நாத் ஷிண்டே அணியில் சேருவதோடு நாடாளுமன்றத்தில் தங்களுக்கு தனி இருக்கை ஒதுக்கும்படி சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்து மனுக்கொடுக்கவும் முடிவு செய்துள்ளனராம். ராகுல் ஷெவாலே தலைமையில் 12 எம்.பி.க்களும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சிவசேனா எம்.பி.கூறுகையில், “முதல்வர் ஷிண்டேயுடன் ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டோம். ராகுல் ஷெவாலே தலைமையில் தனி அணியாக செயல்பட முடிவு செய்துள்ளோம். அவர்தான் எங்களது அணி தலைவர்” என்று குறிப்பிட்டார்.

உத்தவ் தாக்கரே

இதற்கிடையே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னாள் அமைச்சர் ராம்தாஸ் கதம், முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த்ராவ் அட்சுல் ஆகியோரை கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு இருக்கிறார். உத்தவ் தாக்கரே கட்சியில் இருந்து நீக்குபவர்களை உடனே ஏக்நாத் ஷிண்டே தனது அணியில் சேர்த்து அவர்களுக்கு பதவி கொடுத்து வருகிறார். மற்றொரு புறம் சிவசேனாவுக்கு மாநிலம் முழுவதும் 100 நிர்வாகிகளை உத்தவ் தாக்கரே நியமித்திருக்கிறார்.

இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களால் ஓரங்கட்டப்பட்ட தலைவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உத்தவ் தாக்கரே பதவி கொடுத்துள்ளார். அதோடு தேர்தல் கமிஷனில் தங்களது அணிதான் உண்மையான அணி என்பதை காட்ட ஏக்நாத் ஷிண்டே தனது அணியின் தேசிய நிர்வாகிகளை அறிவித்துள்ளார். முதன்மை தலைவராக ஏக்நாத் ஷிண்டே தன்னை அறிவித்துள்ளார். இது தவிர மற்ற துணைத்தலைவர், செய்தித்தொடர்பாளர் என முக்கிய பதவிகளுக்கு ஆட்களை நியமித்திருக்கிறார்.

ஏக்நாத் ஷிண்டே

உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நாளைக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் ஏக்நாத் ஷிண்டே தனது நிர்வாகிகளை அறிவித்திருக்கிறார். ஏக்நாத் ஷிண்டேயின் இந்த செயல் உத்தவ் தாக்கரேயை அதிர்ச்சியடைய செய்துள்ளது. புதிய நிர்வாகிகளுடன் புதிய தீர்மானத்தை நிறைவேற்றி இன்று ஏக்நாத் ஷிண்டே தேர்தல் கமிஷனை அணுக இருக்கிறார். தங்களது அணிக்கு உண்மையான சிவசேனா அங்கீகாரம் கொடுத்து கட்சியின் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று கோர இருக்கிறாராம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.