சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 60 பேரை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ராயப்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி, இன்றும், நாளையும் விசாரணை நடைபெற உள்ளது.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு கூடியிருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது.
இரு தரப்பினரும் கற்கள், உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் போலீஸார், பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள்என 47 பேர் காயமடைந்தனர். 2 தனியார் பேருந்துகள், கார், பைக்குகள் சேதப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார்7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்களின் விவரங்களை வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் சேகரித்தனர். இதன் ஒரு பகுதியாக,முதல்கட்டமாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் தலா 30 பேர் என மொத்தம்60 பேருக்கு ராயப்பேட்டை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
அதன்படி, இன்று (ஜூலை 19) காலை 11 மணிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களும், நாளை இபிஎஸ் ஆதரவாளர்களும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய அனைவருக்கும் படிப்படியாக சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் அடுத்தகட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
இன்று காலை11 மணிக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்களும், நாளை இபிஎஸ் ஆதரவாளர்களும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.