அநாதை பிணமாக ஆஸ்பத்திரியில் கிடந்த மலையாள ஹீரோ
தமிழில் முதல் சூப்பர் ஸ்டாராக இருந்த தியாகராஜ பாகவதர், மாம்பலம் ரெயில் நிலையத்தில் தரையில் படுத்துக் கிடந்ததையும், அரசு ஆஸ்பத்திரியில் கவனிக்க ஆள்இன்றி இறந்து போனது பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படி ஒரு சம்பவம் இப்போது கேரளாவில் நடந்துள்ளது.
1967ல் கலா நிலையம் கிருஷ்ணன் நாயர் இயக்கிய 'இந்துலேகா' படத்தில் ஹீரோவாக நடித்தவர் ராஜ்மோகன். அதன்பிறகு சில படங்களில் நடித்த அவர் போதிய வாய்ப்புகள் இன்றி சினிமாவை விட்டு விலகினார். மனைவியை விவாகரத்து செய்த அவரை உறவினர்களும் கைவிட்டனர். இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் கடந்த 20 வருடங்களாக வாழ்ந்து வந்தார்.
90 வயதான அவருக்கு முதுமை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் சிகிக்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யாருமே அவரது உடலை வாங்க வரவில்லை. அவரது உடல் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் வாசவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசின் சார்பில் உரிய மரியாதையுடன் தகனம் செய்ய அமைச்சர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ராஜ்மோகன் உடல் தகனம் செய்யப்பட்டது.