க.சண்முகவடிவேல், திருச்சி
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் உலகக் கோப்பை ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டுகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர். இதுகுறித்த விபரம் வருமாறு:
சர்வதேச அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் வருடம் தோறும் நடைபெற்று வருவது வழக்கம். இந்தப் போட்டிகளில் ரோலர் ஹாக்கி, இன் லைன் ஹாக்கி, ரோலர் டெர்பி, பிரீ ஸ்டைல் என பல்வேறு பிரிவுகளில் பல்வேறு அணிகளாகவும், தனிப்பட்ட முறையிலும் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
இந்தப் போட்டிகளில் ஒவ்வொரு நாடும் தங்களது நாட்டின் வீரர்களை தேர்வு செய்து இந்த சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்பி வக்கும். அந்தவகையில், இந்திய அணிக்கான ஆடவர், மகளிர் தேர்வு பட்டியல் கடந்த ஜூன் மாதம் இறுதியில் வெளியானது.
இந்த தேர்வு பட்டியலுக்கு முன்பு இரண்டு விதமான பயிற்சிகள் நடத்தப்படும். முதல் கட்ட பயிற்சி சண்டிகர் மொகாலீயில் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு பிரிவிலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணியிலும் 22 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இரண்டாவது பயிற்சி நாட்டில் 3 இடங்களில் நடைபெற்றது. ஆடவருக்கான ரோலர் ஹாக்கி பஞ்சாப்பில் உள்ள பட்டியாலாவிலும், பெண்களுக்கான ரோலர் ஹாக்கி ஹரியானாவில் உள்ள பஞ்ச்குளாவிலும், பெண்களுக்கான ரோலர் டெர்பி மஹாராஸ்ட்ராவில் உள்ள பூனே நகரிலும் நடைபெற்றது.
இதன் இறுதிக்கட்ட முடிவில் ஆண்களுக்கான ரோலர் ஹாக்கியில் 12 வீரர்களும், பெண்களுக்கான ரோலர் ஹாக்கியில் 12 வீரர்களும், ஆண்களுக்கான இன்லைன் ஹாக்கியில் 12 வீரர்களும், பெண்களுக்கான ரோலர் டெர்பியில் 15 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான தேர்வு பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு பட்டியலில் திருச்சியிலிருந்து இந்திய அணிக்கு 9 நபர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பங்கேற்க தேர்வாகியிருக்கின்றனர்.
ரோலர் ஹாக்கிக்கு ஜீவா, நிஷாந்த், காவியா, ஸ்ரீ ஐஸ்வர்யா என்பவர்களும், வீரமணிகண்டன், குரு பிரசன்னா, பூர்ணிஷா ஆகியோர் இன்லைன் ஹாக்கி பிரிவுக்கும், ரினிஷா, மிருதுபாஷினி ஆகியோர் ரோலர் டெர்பி பிரிவுக்கும் தேர்வாகியிருக்கின்றனர்.
மேற்கண்ட வீரர்கள் யாவரும் வரும் அக்டோபர் மாதம் 24 முதல் நவம்பர் 4 வரை அர்ஜெண்டினாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர்.
சர்வதேச அளவில் விளையாட தங்களை தேர்வு பட்டியலில் இடம்பெற உதவியாக பயிற்சி அளித்த தலைமை பயிற்சியாளர் பஸ்லூல் ஹரீம் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் மனோகர், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷனுக்கும் வீரர்-வீராங்கனைகள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
இந்திய ரோலர் ஸ்கேட்டிங் அணிக்கு தேர்வான மேற்கண்ட மாணவர்கள் யாவரும் திருச்சி கே.கே.நகர் வடுகப்பட்டியில் உள்ள ஹாக்கர்ஸ் கிளப் எனும் ஹாக்கி கிளப்பில் இருந்து தேர்வாகியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாக்கர்ஸ் கிளப் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பஸ்லூல் கரீம் தெரிவிக்கையில்; எங்களது கிளப்பில் மாணவர்கள் உள்பட ஸ்கேட்டிங் ஆர்வம் கொண்ட 900-க்கும் மேற்பட்ட பலதரப்பினருக்கும் பயிற்சி கொடுத்து வருகின்றேன்.
திருச்சி வடுகப்பட்டி பகுதியில் இதற்காக எனது சொந்த செலவில் பயிற்சி தளத்தை அமைத்துள்ளேன்.
நான் 1999-ம் ஆண்டு ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியை துவக்கி, மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றேன். அதன் பிறகு, உலக அளவில் ரோலர் போட்டியில் விளையாட எனக்கு பல்வேறு இடையூறுகளால் சர்வதேச விளையாட்டில் பங்கேற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்.
இதனையடுத்து என்னால் தான் சர்வதேச அளவில் பங்கேற்க முடியவில்லை, நான் உருவாக்கும் மாணவர்களாவது சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற வேகத்துடன் பயிற்சி அளித்தேன். எனது கடுமையான பயிற்சியில் சுணக்கமின்றி ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தற்போது சர்வதேச அளவில் விளையாட இந்திய அணியில் தேர்வாகியிருக்கின்றனர்.
ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் 18 வகை விளையாட்டுகள் உள்ளது. (Speed Skating, Roller Hockey, Inline Hockey, Artistic Skating, Inline Freestyle, Inline Alpine, Inline Downhill, Roller Derby, Roller Freestyle, Skateboarding, Roller Scooter) இதில் எமது ஹாக்கர்ஸ் கிளப்பில் இருந்து 9 பேர் 5 க்கும் மேற்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் திருச்சியில் தான் 9 பேர் ரோலர் ஸ்கேட்டிங்க்கு உலக கோப்பை விளையாட்டில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது எமது கிளப்புக்கும், திருச்சிக்கும் பெருமை என்றார் கரீம்.
மேலும், அவர் தெரிவிக்கையில், இந்த விளையாட்டு இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் உள்ளிட்ட படிப்புகளுக்கு விளையாட்டு பிரிவிற்கான முன்னுரிமையில் மாணவர்கள் சேர்க்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விளையாட்டுக்கான உரிய அங்கீகாரம் மற்றும் அரசு பணியில் வேலை என தமிழக அரசு ஸ்கேட்டிங் வீரர்களுக்கும் முன்னுரிமை கொடுத்தால் விளையாட்டு வீரர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் நாட்டிற்கான பெருமையும் தேடித்தந்து தங்கங்களை குவிக்க ஏராளமான தங்க வீரர்கள் தயாராக உள்ளனர்.
ஸ்கேட்டிங்க்கான முறையான ஆணையம் அமைத்து மாவட்டம் முழுவதும் அதற்கான பயிற்சி தளங்களையும் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசுக்கு வைக்கின்றேன்.
இந்திய அளவில் ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் அர்ஜென்டினாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க 75 பேர் தேர்வாகியுள்ள நிலையில் இந்த 18 பிரிவுகளில் தமிழகத்தில் திருச்சியில் இருந்து 9 பேரும் மதுரையில் இருந்து இருவரும் சென்று விளையாட உள்ளனர்.
இந்திய அணியில் தேர்வாகியுள்ள ஒவ்வொரு வீரர்க்கும் அர்ஜென்டினாவுக்கு செல்ல ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் தேவைப்படுகிறது. திருச்சியில் தேர்வாகியுள்ள 9 பேர்களில் ஐஸ்வர்யா, காவ்யா ஆகியோர் தத்தம் ஏழ்மை நிலையிலும் கடுமையான பயிற்சியினை மேற்கொண்டதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வாகியிருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் தமிழக அரசு மனம் வைத்து உதவி செய்தால் நம் தமிழ்நாட்டிலிருந்து இந்திய அளவில் தேர்வாகி சர்வதேச அளவில் விளையாடும் வீராங்கனைகளான இவர்கள் பதக்க வேட்டையாடி தாயகம் திரும்ப உதவியாக இருக்கும் என்றார்.
தமிழக அரசு தொடர்ந்து ரோலர் ஸ்கேட்டிங் பிரிவில் தேர்வாகும் வீரர்களுக்கு உரிய அங்கீகாரமும் வேலை வாய்ப்புகளையும் வழங்க வேண்டும். இதுபோன்ற உலகளாவிய போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கான உதவிகளையும் செய்ய வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.
குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை இவ்விளையாட்டு உபகரணங்கள் என்பது பயிற்சிக்காக இவர்கள் செலவிடும் தொகை அதிகமாகவே உள்ள நிலையிலும், நமது கிளப்பில் ஆர்வமுள்ள ஏழை எளியோருக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து வருகின்றேன்.
தற்போது அர்ஜெண்டினாவுக்கு சென்று சர்வதேச அளவில் விளையாடவிருக்கும் திருச்சி வீரர்-வீராங்கனைகளின் பயிற்சியால் தமிழகத்தின் ரோலர் ஸ்கேட்டிங் பிரிவிற்கான பதக்கப்பட்டியலில் தமிழகத்தை முதலிடத்திற்கு கொண்டு வருவார்கள் எனலாம் என்கிறார் ஹாக்கர்ஸ் கிளப் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பஸ்லூல் கரீம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”