இலங்கையில் நடைபெற இருந்த ஆசியக் கோப்பை டி20 போட்டி, இலங்கையிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
வரும் ஆகஸ்ட் 27 – செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ள ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கை நாட்டில் நடத்துவதற்கு பதில், ஐக்கிய அரபு அமீரக்த்தில் உள்ள துபை மற்றும் ஷார்ஜாவில் நடத்துவதற்கு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்குநாள் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டு வருகிறது.
நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பில் கடும் பற்றாக்குறை ஏற்பட்ட காரணமாகவே பொருளாதாரப் பாதிப்பை இலங்கை சந்தித்து உள்ளது.
எரிபொருள் மட்டுமில்லாமல் உணவு, மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் விலையும் பன்மடங்காக உயா்ந்துள்ளது.
இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இலங்கையில் எவ்வித பாதிப்பும் இன்றி நடைபெறுகின்றன.
அதே சமயத்தில், ஆசியக் கோப்பைப் போட்டி என்பது 9 நாடுகள் பங்கேற்கக் கூடியது என்பதால், அந்நாட்டிலிருந்து துபை, ஷார்ஜாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.