ஆம்பூர் அருகே திருடப்பட்டு திண்டுக்கல்லில் விற்பனை செய்த பசுக்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் காவல்துறையினர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் அண்ணாதுரை தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி மற்றும் அதே பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான 2 பசு மாடுகளை பால் கறப்பதற்காக கடந்த 30.06.2022 அன்று விடியற்காலை எழுந்து பார்த்தபோது பசு மாடுகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனே உம்ராபாத் காவல் நிலையத்தில் இருவரும் புகார் அளித்தனர். அதன் பெயரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்ததில் தேவலாபுரம் மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி காவல் துறையினர் விசாரணை செய்தனர்.
அதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த ஓட்டுநரை கைதுசெய்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை செய்தனர். அவர் குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பதும், கடந்த 30.06.2022 அன்று தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவருடன் சேர்ந்துகொண்டு ரகுபதி மற்றும் பெரியசாமி ஆகியோரின் 2 பசு மாடுகளை திருடி திண்டுக்கல் மாவட்டம் கும்பம்பட்டி பகுதியில் 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து பசு மாட்டின் உரிமையாளர்களுடன் திண்டுக்கல்லுக்கு சென்ற காவல்துறையினர் 2 பசு காடுகளை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை கைப்பற்றி, சதீஷையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஹரியை தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM