இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா நெகட்டிவ் – என்ன நடந்தது?

கொரோனா காரணமாக இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானநிலையில், தற்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான மணிரத்னம், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தநிலையில், நேற்று குறைந்த அளவிலான காய்ச்சலுடன் கூடிய கொரோனா அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் கொரோனா பரிசோதனையின் முடிவில் இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் உள்ள இயக்குநர் மணிரத்னம் தற்போது உடல் நலமுடன் இருப்பதாகவும், சிறிது நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள மருத்துவர்கள் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

image

இயக்குநர் மணிரத்னம் தற்போது அவரது கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி வருகிறார். கல்கியின் நாவலான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக கொண்டு இந்தப் படம் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, சரத்குமார், ஜெயராம், ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பட வெளியீட்டை ஒட்டி இந்தப் படத்தின் போஸ்ட் புரொடெக்ஷன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் இயக்குநர் மணிரத்னம் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.