கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை புதிய அதிபர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தினால் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அதிபர் கோத்தபய ராஜபக்ச அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.
தற்போது ரணில் விக்ரமசிங்க இடைக்கால அதிபராக செயல்படுகிறார். நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் ஜேவிபி கட்சி தலைவர் அனுரா குமார திசநாயக, எஸ்எல்பிபி கட்சியில் இருந்து பிரிந்து சென்ற டலஸ் அழகப்பெரும ஆகிய 4 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் புதிய அதிபராக தேர்வு செய்யப்படுவார்.
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.450-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.20 விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இதேபோல ஒரு லிட்டர் டீசல் ரூ.440-க்கு விற்கப்பட்டது. இதன் விலையும் ரூ.20 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்காக முன்பதிவு செய்துள்ள வாகனங்களுக்கு வரும் 21-ம் தேதி முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இலங்கையை தங்கள் பக்கம் வைத்திருப்பதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் கடந்த 4 மாதங்களில் இந்தியா சார்பில் இலங்கைக்கு ரூ.3,000 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது. சீனா சார்பில் இலங்கைக்கு ரூ.543 கோடி மட்டுமே கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
இலங்கையை வசப்படுத்தும் விவகாரத்தில் சீனாவை இந்தியா தோற்கடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.