வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் இருந்து விலகிக்கொள்வதாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதையடுத்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவருடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே, நாட்டை விட்டு வெளியேறினார். தற்போது ஆசிய நாடான சிங்கப்பூரில் உள்ள அவர், அதிபர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தற்காலிக அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். அனைத்துக் கட்சிகள் கோரிக்கையை ஏற்று, நாளை அதிபர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. கோத்தபய ராஜபக்சேவின் மீதமுள்ள பதவிக் காலமான, 2024, நவ., வரை புதிய அதிபர் பதவி வகிப்பார்.
இந்தத் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கேவுக்கு தற்போது ஆளும் இலங்கை பொதுஜன பெரமுணா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா, ஜனதா விமுக்தி பெரமுணா தலைவர் அனுரா குமார திசநாயகே மற்றும் இலங்கை பொதுஜன பெரமுணாவில் இருந்து பிரிந்து சென்ற டல்லாஸ் அழகப்பெருமா ஆகியோரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். வேட்புமனு தாக்கில் இன்று துவங்குகிறது. இத்தேர்தலையொட்டி, தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாடு முழுதும் அவசர நிலையை பிறப்பித்துள்ளார்.
இதனிடையே, அதிபர் தேர்தலில் இருந்து விலகி கொள்வதாக சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும், ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை நான் திரும்ப பெறுகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்களின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டல்லாஸ் அழகப்பெருமாவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம் எனக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தையில், டலஸ் அழகபெருமா வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை சஜித் பிரேமதாசாவிற்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement