உத்தவ் தாக்கரேவா – ஏக்நாத் ஷிண்டேவா? யார் உண்மையான சிவசேனா? தேர்தல் ஆணையம் இன்று முடிவு

சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணி, ஏக்நாத் ஷிண்டே அணி இரண்டாக பிளவுப்பட்டிருக்கும் நிலையில், யார் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி நடத்தி வந்தது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி வகித்து வந்தார். இதனிடையே, கடந்த மாதம் சிவசேனா மூத்த அமைச்சரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அக்கட்சியின் எம்எல்ஏக்கள் திடீரென மாயமாகினர். பின்னர் அவர்கள் அசாமில் இருப்பது தெரியவந்தது. பதவி மற்றும் அதிகாரத்துக்காக இந்துத்துவா கொள்கைகளை உத்தவ் தாக்கரே அடமானம் வைத்துவிட்டதாக கூறி, அவருக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே அணியினர் போர்க்கொடி உயர்த்தினர்.
image
ஒருகட்டத்தில், சிவசேனாவில் உள்ள பெரும்பாலான எம்எல்ஏக்கள் ஷிண்டே அணிக்கு தாவினர். இதன் தொடர்ச்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக இருந்த பாஜக ஷிண்டே அணியுடன் கூட்டணி அமைத்தது. இதனால் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை பலத்தை அக்கூட்டணி பெற்றது. இதையடுத்து, உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனிடையே, பெரும்பான்மையான சிவசேனா எம்எல்ஏக்களை வைத்திருக்கும் ஏக்நாத் ஷிண்டே அணியினர், தாங்கள் தான் உண்மையான சிவசேனா எனக் கூறி வருகின்றனர். இதனை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இந்த சூழலில், ஏக்நாத் ஷிண்டே அணி சார்பில் தேசிய செயற்குழு நேற்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவின் முதன்மைத் தலைவராக தேர்ந்தெடுத்தது. தேசிய செயற்குழு அமைக்கப்பட்டுள்ளதால், ஒரு முழுமையான அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை தாங்கள் பெற்றுவிட்டோம் என ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி கூறியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை இன்று அணுகவும் ஷிண்டே அணி முடிவு செய்துள்ளது. அப்போது உண்மையான சிவசேனா கட்சியாக தங்களை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அவர்கள் முறையிடுவார்கள் எனத் தெரிகிறது. அதே சமயத்தில், இதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளது. இதன் காரணமாக, எந்த அணி உண்மையான சிவசேனா என்பது இன்று முடிவாகிவிடும் என மகாராஷ்ட்ரா அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
image
இதுகுறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ரவுட் கூறுகையில், “பால் தாக்கரே தொடங்கிய சிவசேனா இதுதான். அதன் தலைவர் உத்தவ் தாக்கரே தான். இதை எங்கு வேண்டுமானாலும் நாங்கள் நிரூபிப்போம். இதில் எந்த மாற்றமும் கிடையாது. இதுதான் அங்கீகரிக்கப்பட்ட சிவசேனா கட்சி. அவர்களிடம் ஏராளமான எம்எல்ஏக்கள் உள்ளனர். அதற்காக சிவசேனா கட்சியே எங்களுடையது என அவர்களால் கூற முடியுமா? அவர்கள் அதிருப்தி அணியினர். அவ்வளவுதான். தகுதிநீக்கத்துக்கான வாள், முதல்வர் ஷிண்டே தலைக்கு மேல் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறக்க வேண்டாம்” எனக் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.