நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 12-ம் தேதிவரை இந்த கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. இதில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் பலரும், மத்திய அரசின் பல்வேறு துறைகள் குறித்துக் கேள்வியெழுப்பிவருகின்றனர். கேள்விக்கான பதில்களை, அந்தந்த துறைகளுக்கான அமைச்சர்கள் எழுத்துப்பூர்வமாகவும், தக்க தரவுகளுடன் வாய்மொழியாகவும் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து ராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் திங்களன்று எழுத்துப்பூர்வ பதிலளித்திருக்கிறார்.
அதில், கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 819 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பதாகவும், அதிகபட்சமாக ராணுவத்தில் இது தொடர்பாக 642 வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும் மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல், இந்திய விமானப்படையில் 148 தற்கொலை வழக்குகளும்… இந்திய கடற்படையில் 29 தற்கொலை வழக்குகளும் பதிவாகியிருக்கின்றன.
மேலும் அஜய் பட், “நாட்டுக்குச் சேவை செய்யும் வீரர்கள் மன அழுத்தம் உள்ளிட்டப் பிரச்னைகளால் இத்தகைய விபரீத முடிவுகளுக்குத் தள்ளப்படுகின்றனர். அதனால், அவர்களின் மன அழுத்தத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதற்கான விரிவான மனநலத் திட்டம் உருவாக்கப்பட்டு 2009 முதல் நடைமுறையிலிருக்கிறது. விடுமுறைக்குப் பிறகு பிரிவுகளுக்குத் திரும்பும் அனைத்து பணியாளர்களும் ரெஜிமென்ட் மருத்துவ அதிகாரிகளால் நேர்காணல், ஆலோசனை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ராணுவத்தில் உள்ள 23 மனநல மையங்களின் உள்ளார்ந்த அங்கமாக கவுன்சிலிங் இருக்கிறது. இது, நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த மனநல மருத்துவர்கள், மனநல மருத்துவ உதவியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது” என்று கூறினார்.