சென்னை: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருககே கலவரம் நடைபெற்ற தனியார் பள்ளியை பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
சேலம் சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநவ் தலைமையில், ஆவடி 5வது பட்டாலியன் காமண்டர் ராதாகிருஷ்ணன், சென்னை பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் கிங்ஸிலின், விழுப்பும் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமால், திருப்பத்தூர் தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமணிகண்டன், நாமக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி ஆகியோர் கொண்ட குழு அமைத்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் புலனாய்வுக் குழு, வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கியவர்கள் மற்றும் போலிச் செய்திகளை பரப்பிரவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்.
மேலும், போலிச் செய்திகளை பரப்பிய யூடியூபர்கள், ஊடக விசாரணை (media Trail) நடத்தியவர்களை கண்டறிந்து அந்த யூடியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.