நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய என மத்திய அரசு கெடு விதித்துள்ள நிலையில், தமிழக அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, நிகழாண்டு குறுவைக்கு பயிர்க் காப்பீடு உண்டா? இல்லையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனடெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை,சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன்படி, டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு நிகழாண்டு 5.20 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் குறுவை தொகுப்புத் திட்டம்ஆகியவற்றை அரசு வழங்கியதால், விவசாயிகள் முழு வீச்சில் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறுவை சாகுபடி என்பது ஜூலை 31-ம் தேதி வரை மேற்கொள்ளப்படும். அதன்பிறகுநடவு செய்யும் பருவம் சம்பாவில் எடுத்துக் கொள்வது வழக்கம்.
குறுவையில் மகசூல் இழப்பு, பேரிடர் போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால் விவசாயிகளுக்கான பாதிப்பை ஓரளவுக்கு குறைக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பயிர்க் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.
தயக்கம் காட்டும் நிறுவனங்கள்
இந்நிலையில், டெல்டாவில் ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடியில் மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதால், அதற்கான இழப்பீடு தொகையை காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு அதிகளவில் வழங்கி வருகின்றன. எனவே, காப்பீடு நிறுவனங்களுக்கு பெரிய அளவில்லாபம் இல்லை என்பதால், டெல்டா மாவட்டங்களில் பயிர்க் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த காப்பீடு நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு (2020-2021) குறுவை சாகுபடிக்கு எந்த காப்பீடு நிறுவனமும் காப்பீடு திட்டத்தில் பங்கேற்க முன்வரவில்லை. பின்னர் தமிழக அரசு, காப்பீடு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சம்பாவுக்கு மட்டும் பயிர்க் காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
விவசாயிகள் கவலை
இந்நிலையில் நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட்டு, குறுவை நடவுப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. இதற்கிடையே, பிரதமரின் பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய கடைசிநாள் ஜூலை 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாளிதழ்களிலும் விளம்பரம் வெளியாகி வருகிறது. அதே நேரத்தில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கான காலம் முடிவடைய இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், தமிழக அரசு குறுவைக்கு பயிர்க் காப்பீடு தொடர்பாக இன்னும் அறிவிப்பு வெளியிடாததால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர்.
ஒருவேளை இனி அறிவித்தாலும், கிராம நிர்வாக அலுவலர்களிடம் சான்றிதழ் பெற்று, இ-சேவை மையங்களில் பயிர்க் காப்பீடு செய்ய போதிய அவகாசம் இல்லை. எனவே,இந்தாண்டும் குறுவைக்கு பயிர்க் காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த முடியாமல் போகும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தரவிமல்நாதன் கூறியது, விவசாயிகளுக்கு சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டால் அதிலிருந்து பாதுகாக்க பயிர்க் காப்பீடு திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதுவரை மத்திய, மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்போடு பயிர்க் காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.
பயிர்க் கடனும் வழங்கவில்லை
ஆனால், கடந்தாண்டு குறுவை சாகுபடியில் பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. சம்பா பருவத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டது.
பயிர்க் காப்பீடு திட்டம் குறித்து தமிழக அரசு இதுவரை அறிவிக்கப்படாத காரணத்தால், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடனும் வழங்கவில்லை. தனியாரிடம் வட்டிக்குவாங்கி விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
தஞ்சாவூரில் ஜூன் 7-ம் தேதி நடைபெற்ற குறுவை சாகுபடி ஆயத்தப் பணிகள் குறித்தஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பயிர்க் காப்பீடு திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார். ஆனால், இதுவரை அறிவிப்பு வரவில்லை. எனவே, இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு திட்டம் உண்டா, இல்லையா என தமிழக அரசு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.
மத்திய அரசின் பயிர்க் காப்பீடு கெடு முடிய இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் கடைசி நேர இணையதள சர்வர் பிரச்சினையை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றார்.