டெல்லி: கேரளாவில் நீட் எழுதவந்த மாணவியிடம் உள்ளாடை களையசொன்னதாக எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வழக்கமாக பின்பற்றப்படும் கெடுபிடிகளுடனேயே நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்தது. குறிப்பாக மாணவ, மாணவிகளின் தலைமுடி முதல் கால் பகுதி வரை முழுமையாக அதற்கான கருவியை கொண்டு பரிசோதித்தனர். மாணவர்கள் காப்பு, கம்மல், செயின், பெல்ட், முழுக்கை சட்டை அணிந்து வர தடை இருந்தது. இதனிடையே, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடைகளை கழற்ற சொல்லி, அதன்பின் தேர்வு எழுத அனுமதித்ததாக சர்ச்சை எழுந்தது. சூரநாட்டை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தேர்வு மைய நுழைவாயிலில் உள்ளாடைகளை கழற்றி சோதனை செய்து, ஆடைகளையும் சோதனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயல் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. தனக்கு மட்டுமின்றி அங்குவந்த மாணவர்கள் அனைவருக்கும் இதுபோன்ற சோதனை நடத்தப்பட்டதாகவும், மாணவர்களின் உள்ளாடைகள் பெறப்பட்டு அவற்றை இரண்டு அறைகளில் வைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார். இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த தேசிய தேர்வுகள் முகமை, கேரளாவில் நீட் எழுதவந்த மாணவியிடம் உள்ளாடை களையசொன்னதாக எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஆடை சர்ச்சை விவகாரம் தொடர்பாக உடனடியாகவும், நீட் தேர்வுக்கு பிறகும் எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை. ஆடை கட்டுப்பாடு வழிமுறைகளில் இதுபோன்ற நடைமுறைகளை அனுமதிக்கவில்லை. புகார் தெரிவித்த மாணவி குறிப்பிட்ட மையத்தில் தேர்வு எழுதியதை தேசிய தேர்வு முகமை உறுதிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளது. மாணவியின் புகாரில் கொல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்திருக்கிறது.