நாடு முழுவதும் கடந்த ஜுலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் போது கேரளாவில் ஒரு குறிப்பிட்ட தேர்வு மையத்தில் மாணவிகள் தங்களின் உள்ளாடையை கழற்றிவிட்டு மேலாடையை மட்டும் அணிந்து வந்தாலே தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என வற்புறுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக இந்திய தண்டனை சட்டங்கள் 354 ( பெண்ணின் மாண்பை சிதைக்கும் வகையில் வற்புறுத்துவது) 509 ( பெண்ணின் மாண்பை சிதைக்கும் வகையில் செயல்படுவது) ஆகியன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொல்லம் மாவட்டம் அய்யூர் பகுதியில் உள்ள ஒரு தனியா கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் நடந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து திங்கள்கிழமை இரவு 17 வயது சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 3 மணி நேரம் உள்ளாடை இல்லாமல் தேர்வு அறையில் அமர்ந்திருந்ததால் தன மகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வர்கள் என்ன மாதிரியான அடைகள் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டிருந்தனரோ அந்த விதிமுறைகளின் படியே தனது மகள் ஆடை அணிந்திருந்ததாகவும் உள்ளாடை பற்றி வேறு எந்த நிபந்தனையை இல்லாத நிலையில் தேர்வு மையத்தில் நடந்தது அத்துமீறல் என்று மாணவியின் தந்தை புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
18 லட்சம் பேர் எழுதினர்: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்டமருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக “நீட்” நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை மத்திய அரசு சார்பில் என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, நீட் தேர்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும் 497 நகரங்களில் நேற்று நடைபெற்றது. தேசியஅளவில் 18 லட்சத்துக்கும்
மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். தேர்வு மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கைக்கடிகாரம், செல்போன், புளு டூத், ஹெட்போன், கேமரா, கால்குலேட்டர் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.