முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமான ஜனாதிபதிப் பதவிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இன்று (19) பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன.
அதற்கமைய, பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெரும மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுரகுமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் இவ்வாறு முன்மொழியப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ டலஸ் அழகப்பெருமவின் பெயரை எதிர்க்கட்சித்தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ ஜீ.எல். பீரிஸ் அதனை வழிமொழிந்தார். கௌரவ ரணில் விக்ரமசிங்கவின் பெயரை பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மனுஷ நாணாயக்கார அதனை வழிமொழிந்தார். அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுரகுமார திசாநாயக்கவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விஜித ஹேரத் முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) கௌரவ ஹரிணி அமரசூரிய அதனை வழிமொழிந்தார்.
இந்த வேட்பாளர்கள் மூவரினதும் வேட்புமனுக்கள் 1981 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க ஜனாதிபதித் தோ்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய அடுத்துவரும் ஜனாதிபதி பதவிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அறிவித்தார்.
அதற்கமைய நாளை (20) இந்த மூவரில் ஒருவர் அடுத்துவரும் ஜனாதிபதியாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் தேர்தெடுக்கப்படவுள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி தனது இராஜினாமாக் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்திருந்தார். அதற்கமைய கடந்த 16 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவித்ததுடன், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (19) ஜனாதிபதிப் பதவிக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.