உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு குறைந்தவிலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது.
இதுமட்டுமின்றி ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து உலக நிதிய அமைப்பில் இருந்து ரஷ்யா அந்நியப்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடியை அந்நாடு சந்தித்து வருகிறது.
கடந்த நூற்றாண்டில் இல்லாதவகையில் ரஷ்யா தனது வெளிநாட்டு நாணய கடனை முதன்முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை. ரஷ்யாவும் தனக்கு வேண்டியவற்றை வாங்கவும், தான் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு நல்ல விலை பெறவும் முடியாமல் தடுமாறுகிறது. இந்தியா, சீனா, ஈரான் உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவுடன் இப்போதும் வர்த்தக உறவைத் தொடர்கின்றன.
இது ஒருபுறம் என்பதால் உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு அண்மையில் 80 ஆக சரிவடைந்தது. இறக்குமதிக்காகும் செலவுகளை ஈடுகட்டவும் இந்திய நிதிச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலைத் திரும்ப எடுப்பதால் அதற்கு ஈடாக கைவசம் உள்ள அமெரிக்க டாலர்களைத் தர வேண்டியிருப்பதாலும்கூட இந்தியாவின் கையிருப்பிலிருந்து டாலர்கள் வேகமாகக் கரைகின்றன. இதனால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிகிறது.
கைகொடுக்கும் ரஷ்யா
உள்நாட்டு வர்த்தகர்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை இந்திய ரூபாயில் செய்து கொள்வதற்கான அனுமதியை வழங்குவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவுடன் வர்த்தகத்தை எளிதாக்குவதுடன் சரியும் ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்தும் என நம்பப்படுகிறது.
அதாவது இந்திய ரூபாயை வாங்கிக்கொள்ள அல்லது இந்திய ரூபாயில் வணிகம் செய்ய எந்த நாடுகள் தயாராக இருக்கின்றனவோ அவற்றுடன் ரூபாய் மூலமே பரிவர்த்தனையைச் செய்துகொள்ள இந்தியா முடிவு எடுத்துள்ளது.
இந்தியாவின் இந்த முடிவை ரஷ்யா வரவேற்றுள்ளது. கடும் நெருக்கடியில் உள்ள ரஷ்யா இனிமேல் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய இந்த நடவடிக்கை உதவும் என நம்பப்படுகிறது. உலக அளவில் வர்த்தகத்தில் முக்கிய புள்ளியாக டாலர் உள்ளது. உலகம் முழுவதும் நடைபெறும் வர்த்தகத்தில் 70 சதவீதம் வரை டாலர்களிலேயே நடைபெறுகிறது.
சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலர் முக்கியச் செலாவணியாக இருந்தாலும் வேறு சில நாடுகளின் செலாவணிகளும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் யூரோ, பிரிட்டனின் பவுண்ட், இத்தாலியின் லிரா, பிரான்சின் பிராங்க், ஜெர்மனியின் மார்க், ஜப்பானின் யென், சீனாவின் யுவான், வளைகுடா நாடுகளின் செலாவணிகள் போன்றவை பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. எனவே ரூபாயையும் அப்படிப் பயன்படுத்தத் தடையில்லை.
ரஷ்யா தான் உற்பத்தி செய்யும் கச்சா பெட்ரோல், சமையல் எரிவாயு ஆகியவற்றை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதுபோலவே தங்களுக்கு தேவைப்படும் உணவு தானியங்கள், மருந்து – மாத்திரைகள், இதர அவசியப் பொருட்களை வாங்கிக் கொள்கிறது. ரஷ்ய இறக்குமதிக்கு இந்தியா டாலர்களைக் கொடுக்க வேண்டாம், கைவசம் உள்ள இந்திய ரொக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முக்கியத்துவம் இழக்கும் டாலர்
இந்தியாவைப் பொறுத்தவரை இப்போது ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்புதான் அதிகம். இதனால் நடப்புக் கணக்கு பற்றுவரவில் இந்தியாவுக்கு இழப்புதான் அதிகம். ஆனால் அதற்காக டாலர்களை மட்டுமே நாடுவதால் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு தொடர்ந்து சரிந்து இந்த பற்றாக்குறையின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கும்.
ரூபாயிலேயே வரவு – செலவு நடைபெறும்போது இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோல் – எரிவாயு மதிப்பைவிட தான் வாங்கும் உணவு தானியங்கள், மருந்து – மாத்திரைகளுக்கு ரஷ்யா அதிகம் தர வேண்டியிருந்தால், அந்தக் கூடுதல் தொகைக்கு மட்டும் அது ரூபிளை பயன்படுத்தினால் போதும்.
ரஷ்ய நிறுவனங்கள் தாங்கள் செய்த ஏற்றுமதிக்கு இணை மதிப்பில் தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்துகொண்டால் போதும். ரூபாய் கணக்கில் இரண்டும் நேர் செய்யப்படும். செலாவணி பரிமாற்றத்துக்கான தேவைகூட குறைந்துவிடும். கிட்டத்தட்ட பண்டமாற்று போலவே ஆகிவிடும். இதனால் இரு நாடுகளுக்கும் செலாவணியைத் திரட்ட வேண்டிய நெருக்கடிகூட இருக்காது.
இந்தியாவுடன் ரூபாய் கணக்கில் ரஷ்யா வர்த்தகம் செய்யத் தொடங்கியதும், இந்தியா தர வேண்டிய தொகையை அப்படியே ரூபாயாக இந்திய பங்குச் சந்தையிலும் கடன் பத்திரச் சந்தையிலும் ரஷ்யா முதலீடு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இது இரண்டு வகையில் இந்தியாவுக்கு நல்லது. இந்திய ரூபாயும் கையிருப்பிலேயே இருக்கும். அதே சமயம் ரஷ்யாவின் செயலால் அந்நிய முதலீடும் ஒரேயடியாகச் சரிந்துவிடாமல் பராமரிக்கப்படும்.
ரஷ்யா போலவே வேறு சில நாடுகளும் ரூபாயைப் பெறச் சம்மதிக்கின்றன. காரணம் இந்தியாவிடமிருந்துதான் சில பொருட்களை அவற்றால் விலை குறைவாக வாங்க முடியும். இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்டவை, ரூபாய் வழியிலான பரிமாற்றத்தை எளிதாகச் செய்ய முடியும்.
சர்வதேச வணிகத்தில், இப்படி இந்திய ரூபாயைப் பரிமாறிக்கொள்வதால் இந்தியாவின் கடன் பத்திரச் சந்தை வலுப்படும். ரஷ்யா மட்டுமல்ல இலங்கை, ஈரான் போன்ற நாடுகள்கூட இந்திய ரூபாயை ஏற்கத் தயாராக இருக்கின்றன.
இந்தியா 2016-ல் தன்னுடைய அந்நியச் செலாவணி கையிருப்புகளில் 65 சதவீத அளவுக்கு டாலர்களாக வைத்திருந்தது. அதையே 2022-ல், 60 சதவீதம் ஆகக் குறைத்துக்கொண்டது. இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவில் டாலரின் ஆதிக்கம் சிறிது சிறிதாக குறையும் என எதிர்பார்க்கலாம்.