ஈரோடு: தமிழகத்தில் போலி மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியில், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஹீமோகுளோபினோபதி திட்டத்தினைத் தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியது: “தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் 12 கிராமங்களில், கருவுற்ற தாய்மார்களிடையே ஹீமோகுளோபினோபதி, தலசீமியா நோய் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை செய்து, சிகிச்சை வழங்க ரூ 1.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் மூலிகை மருந்து மூலம் புற்றுநோயைக் குணப்படுத்துவதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து, அதிகாரிகளைக் கொண்டு கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
செயற்கை கருத்தரித்தல் மையம் செயல்படுவதே தவறு என்று சொல்ல முடியாது. சினைமுட்டை தானம் என்பது சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. 21 வயதில் இருந்து 35 வயதுக்குள், ஒரு குழந்தை பெற்றெடுத்த தாய் கொடுக்கும் சினை முட்டையை அவர்கள் பெறலாம். ஆனால், 16 வயது இளம்பெண்ணிடம், ஆறு மருத்துவமனைகள் தொடர்ச்சியாக சினை முட்டை பெற்றதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு, விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என பொதுவான அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் போலி மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகள் புழக்கத்தில் உள்ளதா என்பதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத் துறையில், 4308 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
உயிர் தப்பிய பத்திரிகையாளர்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக ஈரோட்டில் இருந்து செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். திம்பம் சாலையில், 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து மலைப்பாதையில் பயணித்து தாளவாடி செல்ல வேண்டிய நிலையில், பாதுகாப்பற்ற முறையில், ஆம்புலன்ஸ் மற்றும் மற்றொரு வாகனத்தில் பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
13-வது கொண்டை ஊசி வளைவில் இந்த வாகனம் சென்றபோது, மலையேற முடியாமல், சாலையில் பின்னோக்கி இறங்கியது. உடனே, பத்திரிகையாளர்கள் வாகனத்தில் இருந்து கீழே குதித்து, டயரில் கல் வைத்து உயிர் தப்பினர்.