சென்னை: “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரை பணக்காரர்களாக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பல சாக்குப் போக்குகள் சொல்லி தமிழகத்தின் மின்துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், சிலரை பணக்காரர்களாக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. நீங்கள் செல்வச் செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?” என்று பதிவிட்டிருந்தார்.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “லஞ்சம், ஊழல், முறைகேடுகள், நிர்வாக சீர்கேடு, முறையான திட்டமின்மை, மலிவு அரசியல் ஆகிய காரணங்களால் மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் விநியோகத்தை முறையாக செய்யமுடியாமல் மின்வாரியத்தையும், பகிர்மான கழகத்தையும் பெரும் நஷ்டத்தில் மூழ்க விட்டதற்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் செந்தில்பாலாஜி மத்திய அரசின் நிர்பந்தத்தால்தான் மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நிர்வாக திறனற்ற நிலையில், லஞ்சம், ஊழலை ஒழிக்க மனமில்லாத அரசு பழியை மத்திய அரசின் மீது போட்டு தப்பித்துக் கொள்ள பார்ப்பது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். மின்சாரத்தை சேமித்தால், அரசுக்கு லாபம். இல்லையேல் அரசியல்வாதிகளுக்கு லாபம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
உண்மையில் மக்கள் மீது அக்கறையிருந்தால், மத்திய அரசின் ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்துவதில், முனைப்புக் காட்டுங்கள். அதை விடுத்து மத்திய அரசின் மீது விமர்சனம் செய்துவிட்டால் மக்கள் உங்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள் என்று எண்ணாதீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.