ஹைதராபாத்: குடியரசு தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள சட்டப்பேரவையில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உட்பட மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அப்போது, முலுகு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ.வான பழங்குடியினத்தை சேர்ந்த அனுசுயா என்ற சீதக்கா, எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு பதிலாக, பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு வாக்களித்து விட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சீதக்கா கூறும்போது, ‘‘முதலில் எனக்கு கொடுத்த வாக்கு சீட்டில் பென்சில் என நினைத்து எழுதி பார்த்தேன். ஆனால், இங்க் பதிந்து விட்டதால், வேறொரு வாக்கு சீட்டை கேட்டேன். ஆனால், எனக்கு மறு வாக்கு சீட்டு கொடுக்கப்படவில்லை. ஆனால், நான் என்னுடைய ஆத்ம விருப்பத்தின்படியே வாக்களித்தேன் என கூறினார்.
சீதக்கா, தனது பழங்குடி இன பெண் வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு தெரிந்தேதான் வாக்களித்தார் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் வெளிப்படையாக விமர்சித்தனர். ஆந்திர மாநிலம் அமராவதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்கு சாவடியில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். மேலும், சந்திரபாபு நாயுடுவும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர்.